தமிழ்நாடு

tamil nadu

சிரிப்பு போலீஸ் டூ சீரியஸ் போலீஸ் - நடிகர் ஜார்ஜ் மரியம் கலகல பேட்டி

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி, துணைக் கதாப்பாத்திரங்களில் தலைகாட்டி வந்த நடிகர் மரியம் ஜார்ஜ் தீபாவளி ஸ்பெஷலாக வெளிவந்த 'பிகில்', 'கைதி' என இரண்டு படங்களிலும் தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளார். விஜய்யின் 'பிகில்' படத்தில் சர்ச் ஃபாதராகவும், கார்த்தியின் 'கைதி' படத்தில் கான்ஸ்டபிளாக அரங்கை அதிரவைத்த மாஸ் போலீஸாகவும் கலக்கியுள்ளார்.

By

Published : Nov 2, 2019, 2:31 PM IST

Published : Nov 2, 2019, 2:31 PM IST

Updated : Nov 2, 2019, 3:23 PM IST

நடிகர் மரியம் ஜார்ஜ்

'கைதி' படத்தின் வரவேற்பு எப்படியிருக்கிறது?

நான் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. மக்கள் எல்லாம் கொண்டடுறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இதுவரை காமெடி வேடங்களில் நடித்த நீங்கள், 'கைதி' படத்தில் ஹீரோ மாதிரி மாஸ் காட்சிகளில் நடித்திருப்பது பற்றி...

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதை சொல்லும்போதே இந்தப் படத்துல உங்களுக்கு முக்கியமான ரோல், நல்லா வரும் பாருங்கன்னு சொன்னார். எல்லாப்படத்திலையும் இப்படித்தான் சொல்லுவாங்க. அதில் வேலை பார்த்தது போல்தான் இந்தப் படத்திலும் வேலை பார்த்தேன். ஆனா இப்ப பெரிய வெற்றிப்படமா எனக்கு அமைஞ்சிடுச்சு.

இப்படி ஒரு படத்தில் நானும் ஒரு அங்கமா இருக்கிறது ரொம்ப மகிழ்ச்சி. இணையம் முழுக்கப் பாராட்டுறாங்க. நெப்போலியன் கேரக்டர் பத்தி எல்லோரும் பேசுறாங்க. சொந்தக்காரங்க எல்லாரும் சூப்பரா பண்ணிருக்கீங்கனு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது.

காமெடி போலீஸாக பல படங்களில் நடித்திருந்தாலும், 'கைதி'யில் மாஸ் கேரக்டரில் நடித்திருந்ததை எப்படி உணர்கிறீர்கள்?

ஆமா இதுவரைக்கும் காமெடியாதான் நடிச்சிருக்கேன். இயக்குநர் சுந்தர் சி படங்கள்ல காமெடி போலீஸா நடிச்சிருக்கேன். எல்லோரும் கொண்டாடுவாங்க. நம்மள பார்த்து சிரிப்பாங்க. தடம் படத்தில்தான் முதல் முறையாக இயக்குநர் மகிழ் திருமேனி கொஞ்சம் சீரியஸான ரோல் தந்தாரு. ஆனா கைதில ரொம்பவும் கனமான கதாபாத்திரம். எனக்கே கொஞ்சம் சந்தேகம் இருந்தது. என்னடா மக்கள் இதுவரைக்கும் நம்மள காமெடியனதான் பார்த்திருக்காங்க. இதுல இவ்வளவு சீரியஸான பாத்திரத்தில எப்படி ஏத்துப்பாங்கன்னு தோணுச்சு. அவங்க சிரிச்சிட்டா தப்பாயிடுமேனு யோசிச்சேன். ஆனா இயக்குநர் லோகேஷ் தைரியம் தந்து, என்னை நடிக்கவைத்தார். அவருக்கு கதை மேல பயங்கர நம்பிக்கை. அவர் கொடுத்த தைரியத்தால்தான் பண்ணினேன். காமெடில இருந்து நம்மள இப்படிப்பட்ட பாத்திரத்தில மக்கள் ஏத்துகிட்டதே பெரிய சந்தோஷம்தான்.

கார்த்தியோட நடித்த அனுபவம் பற்றி...

கார்த்திக்கிற்கும் எனக்கும் படத்தில் கடைசிலதான் சீன் வரும். அதுவும் பயங்கரமா வந்திருக்கு. அதுவரைக்கும் அவர் கதை தனியா நடக்கும். கார்த்தி நடிப்பில பிரமாதப்படுத்தியிருக்கார். லாரி ஓட்டுறது எல்லாம் அவ்வளவு ஈஸி கிடையாது. ஆனா அவரேதான் படம் முழுக்க லாரி ஓட்டியிருக்கார். அவர் தன்னோட வேலையில சரியா இருப்பார்.

என்னுடைய காட்சி முழுக்க கமிஷனர் ஆபிஸிலதான். நல்லா பண்ணிருக்கேன்னு நினைக்கிறேன்.

எல்லோருமே அருமையா வேலை பார்த்திருக்காங்க. கேமராமேன் சத்யன் செய்திருப்பது எல்லாம் பிரமிப்பான வேலை. இரவுல ஷீட் பண்ணுறது மிகப்பெரிய கஷ்டம். அதுவும் அவுட்டோர்ல எவ்வளவு லைட்ட வைக்க முடியும் சொல்லுங்க. ஆனா படம் பார்க்கும்போது அற்புதமா ஒரு ஆங்கில படம் மாதிரி வந்திருக்கு.

அதே மாதிரி ரீ ரிக்கார்டிங் சாம் சி எஸ் பின்னிட்டார். ஒரு பாட்டில எரிஞ்சா அது எங்க விழுது, எது மேல விழுதுங்கிற மாதிரி சவுண்ட் கரெக்டா வந்திருக்கு. மக்கள் எல்லாத்தையும் உன்னிப்பா பார்த்து பாராட்டுறாங்க. படம் பார்த்து கார்த்தி என்னை கூப்பிட்டு பாராட்டுனாரு. அவருக்கு பெரிய மனசு.

கூத்துப்பட்டறை மூலமா சினிமாவுக்கு வந்தவர் நீங்கள். அந்த அனுபவம் பத்தி சொல்லுங்கள்?

1990களிலேயே நான் கூத்துப்பட்டறைல சேர்ந்துட்டேன். நான், பசுபதி, ஜெயக்குமார், கலைராணி, இப்படி நிறைய பேர். பசுபதி, கலைராணி சீக்கிரமே சினிமாவுக்குள் வந்துட்டாங்க. நான் பத்து வருஷமா அங்கதான் நாடகங்கள்ல நடிச்சிட்டு இருந்தேன். நாசர்தான் அவரோட 'மாயன்' படத்தில அறிமுகப்படுத்தினார். அவர் மூலம்தான் சினிமாவுக்கு வந்தேன். பசுபதியும் அவர் மூலமாதான் கமல்ஹாசனுக்கு அறிமுகமாகி வில்லனாக நடிக்க ஆரம்பிச்சார். எனக்கு இப்போதுதான் ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கு.

'காஞ்சீவரம்' திரைப்படம் உங்களுக்கு ஒரு அடையாளமாக இருந்ததே, அதைப்பற்றி?

அந்தப் படத்தில் என்னைப் பலரும் அடையாளம் கண்டு சொன்னார்கள். படத்தில் பிரியதர்ஷனிடம் அஸிஸ்டென்டாக இயக்குநர் ஏ.எல். விஜய் வேலை பார்த்தார். அவர்தான் என்னை அந்தக் கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்தார். அப்போது ஏற்பட்ட பழக்கம், அவர் படங்களில் தொடர்ந்து எனக்கு வாய்ப்பு தருவார்.

'பொய் சொல்லப் போறோம்' எனக்கு முக்கியமான படம். அதன் கதையே நாடகம் போட்டு ஏமாற்றுவது மாதிரி நாசரும், நானும் நடிச்ச காட்சி எல்லோருக்கும் பிடித்திருந்தது. நாசர் முன்னரே எனக்குப் பழக்கம் என்பதால் அந்தக் காட்சியில் நன்றாக நடிக்க முடிந்தது. அவரும் மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார். கூத்துப்பட்டறை நடிகர்களை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். அதைத்தொடர்ந்து இயக்குநர் ஏ.எல். விஜய்யின் மதராசப்பட்டினம், சைவம் என எனக்கு எல்லாமே நல்ல ரோல்கள்.

சுந்தர் சி படங்களிலும் உங்களை அதிகமாகப் பார்க்க முடிகிறதே?

அவருக்கும் என்னை ரொம்பவும் பிடிக்கும். இப்படி பண்ணுடா என உரிமையோடு சொல்வார். 'கலகலப்பு', 'கலகலப்பு 2' ரெண்டிலுமே மக்கள் ரசிக்கும்படியான கேரக்டர். 'கலகலப்பு 2' படத்தில் படகு காட்சியில் நானேதான் படகு ஓட்டினேன். நாடகங்களில் நடித்தபோது பலவற்றையும் கற்றுக் கொண்டேன். நான் செய்யும் பாத்திரங்களில் உண்மையாக இருப்பேன். நாமே செய்ய வேண்டும் என நினைப்பேன். அந்தக் காட்சியில் ராதாரவியும் பெரிய ஒத்துழைப்பு தந்தார். மக்களும் பெரிதாக ரசித்தார்கள்.

தீபாவளிக்கு வெளியான விஜய்யின் 'பிகில்' படத்திலும் நடித்திருந்தீர்களே. அந்த அனுபவம் பற்றி ?

விஜய் அருமையான நடிகர். அவரை திட்டுவது போல் ஃபாதர் கேரக்டர் எனக்கு. கொஞ்சம் பயமாகிவிட்டது. அவரிடம் முன்னரே கேட்டேன், இந்த மாதிரி தப்பா எடுத்துக்காதீங்க என்றேன். அவர் அதெல்லாம் ஒன்றுமில்லை. இது காட்சிதான் நீங்கள் நன்றாக செய்யுங்கள் என்றார். எனக்கு கூச்சம் போக காட்சி எடுக்கும் நேரத்தில் எங்களுடனேதான் இருப்பார். எங்களுடன்தான் சாப்பிடுவார். அவ்வளவு எளிமை. பிகில் படத்தில் நடித்தது பெரும் சந்தோஷம்.

அஜித்துடன் 'விஸ்வாசம்' படத்தில் நடித்த அனுபவம் பற்றி...

அவரும் அன்பானவர். தோளில் கைபோட்டு கட்டிப்பிடித்துக் கொள்வார். என்ன படமெல்லாம் நடிக்கிறேன் என விசாரிப்பார். படம் முடிந்தபோது யூனிட்டுக்கே அவர் கையால் சமைத்து பிரியாணி செய்துதந்தார். அவருடன் நடித்தது மகிழ்ச்சியானது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறீர்கள். வேறு எந்தந்த நடிகர்களுடன் நடிக்க ஆசை?

அப்படி எதுவும் இல்லை. இதுவரை எல்லாப்படத்திலும் சின்ன சின்ன கதாப்பாத்திரங்கள்தான் செய்திருக்கிறேன். பெரிய கதாப்பாத்திரங்கள் செய்யும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல கேரக்டர்கள் கிடைத்தால், இன்னும் நிறைய செய்ய ஆசை.

'கைதி' பார்த்து விட்டு உங்கள் குடும்பத்தில் என்ன சொன்னார்கள் ?

படம் எடுக்கும்போதே, அண்ணா வீட்டில் இப்போது எதுவும் சொல்லாதீர்கள், படம் வந்த பிறகு கூட்டிப்போங்கள் என்று இயக்குநர் லோகேஷ் சொன்னார்.

தீபாவளிக்கு படத்துக்கு குடும்பத்தை கூட்டிப்போனேன். என் பையனும் மகளும் ஆச்சரியப்பட்டார்கள். அப்பா என்ன இவ்வளவு பெரிய ரோலில் நடித்திருக்கிறீர்கள், சொல்லவே இல்லையே என்றார்கள். அவர்களின் நண்பர்கள் எல்லாம் உங்கள் அப்பா பிரமாதமாக நடித்திருப்பதாகப் பாராட்டியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இதைவிட வேறென்ன வேண்டும். சினிமாவில் வந்து இத்தனை வருடத்தில் மிகப்பெரிய சந்தோஷம் இதுதான்.

அடுத்து நீங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் பற்றி...

சமுத்திரகனியின் 'அடுத்த சாட்டை' படத்தில் ஒரு ரோல் பண்ணிருக்கேன். தம்பி ராமையாவும் நானும் சேர்ந்து பண்ணிருக்கோம். பிழை படத்தில் ஒரு ரோல் பண்ணிருக்கேன். இயக்குநர் ஷங்கரின் 'இந்தியன் 2' படத்தில் ஒரு கதாபாத்திரம் பண்றேன். 'கைதி' ஒரு பிள்ளையார் சுழி மாதிரி. நமக்கு இனி எல்லாம் நல்லது நடக்கணும்.

ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தியேட்டர்ல போய் படம் பாருங்க. நல்ல படத்தை ஆதறீங்க. எங்களைப் போன்றவர்களையும் பாராட்டுங்க. அவ்வளவுதான்.

Last Updated : Nov 2, 2019, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details