சென்னை: கடந்த இரண்டாண்டு காலமாக கரோனா தொற்றுப் பாதிப்பால் மக்கள் முடங்கி கிடந்த நிலையில், இப்பொழுது தான் அனைவரும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர்.
திரைத்துறையும் இப்பொழுதுதான் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. திரைப்படங்களும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், நடிகர் அருண் விஜய் இந்த இரண்டு ஆண்டு காலங்களாக, தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் நேரில் சந்திக்க இயலாத காரணத்தால் தொலைபேசி வாயிலாகவும் வீடியோ கால் மூலமாகவும் ரசிகர்களையும் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களையும் நலம் விசாரித்து உரையாடல் மேற்கொண்டு வந்தார்.
தற்போது நீண்ட காலத்திற்குப்பின் கரோனா குறைந்து, மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதை அடுத்து, அவர் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். அது மட்டுமின்றி இரண்டாண்டுகள் கழித்து, அவருடைய திரைப்படங்கள் யானை, சினம், பார்டர், ஓ மை டாக், அக்னி சிறகுகள் ஆகியவை மிக விரைவில் வெளியாக உள்ளன.
ரசிகர்களுடன் சந்திப்பு
அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட்டார். திருவண்ணாமலையில் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார்.
சமீபத்தில் கோயம்புத்தூர் சென்றிருந்த போதும் கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார். கடந்த வாரம் தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோதும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார்.
ரசிகரின் பிறந்தநாள் கொண்டாட்டம்
நேற்று (மார்ச் 20) சென்னை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து இருக்கிறார். அவரின் யானை படம் வெளியாகும் முன் அனைத்து மாவட்ட ரசிகர்களை சந்திக்க இருப்பதாக ரசிகர் மன்றம் வாயிலாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்நிகழ்வில் தன்னைச் சந்திக்க வந்த அருண் விஜய் ரசிகர் மன்ற தென் சென்னை மாவட்ட நிர்வாகி K.ஶ்ரீதரின் பிறந்தநாள் என்பதை அறிந்த நடிகர் அருண் விஜய், அவருடைய பிறந்த நாளுக்கு கேக் வெட்டி, தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டு, தனது ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
இதையும் படிங்க:'இது இரண்டு ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த வெற்றி..!' - நடிகர் கார்த்தி