மும்பை: பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்த்து வீட்டிலேயே பத்திரமாக இருக்கமாறு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வலிறுத்தியுள்ளார்.
கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதை வலியுறுத்தி நடிகர் ஷாருக்கான் ட்விட்டரில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவசியத் தேவை இல்லாமல் ரயில், பேருந்து பயணங்களைத் தவிருங்கள். இனி வரவிருக்கும் 10 முதல் 15 நாள்கள் மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் காணொலியில், 'நாம் அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவுக்கு எதிராகப் போராடுவோம்' என்று #WarAgainstVirus ஹேஷ்டாக்குடன் பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, "சமூகத் தொடர்பை முடிந்தவரை குறைத்துக்கொண்டு அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் அறிவித்த சுய ஊரடங்கு உத்தரவை, இந்தத் தொற்று குறையும்வரை தனிப்பட்ட முறையில் நாம் முடிந்த அளவு தொடர வேண்டும்.
தற்போதைக்கு கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். எனவே அனைவரும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியதுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்கள் வெளிவந்துள்ளதா என்பதைக் கவனமாக ஆராய்ந்து செயல்படுங்கள். அரசு சொல்லும் அறிவுறுத்தல், வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்றுங்கள்" என்று குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேசிய காணொயையும் இணைந்துள்ளார்.
தற்போது வரை இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 39 வெளிநாட்டவர் அடக்கம். 20-க்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.