சல்மான் கான் நடிப்பில் கடைசியாக வெளியான 'தபாங் 3' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. இந்தப்படத்தை பிரபுதேவா இயக்கியிருந்தார். தொடர்ந்து 'ராதே' படத்திலும் சல்மான் கான் பிரபுதேவா கூட்டணி இணைந்துள்ளது. இந்தப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே சல்மான் கான் தனது ஆஸ்தான இயக்குநரான சூரஜ் பார்ஜத்யாவுடன் மீண்டும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான பட வேலைகள் தொடங்கியுள்ளதாகவும், இரண்டு கதைகள் எழுதியுள்ளதாகவும் இயக்குநர் சூரஜ் பார்ஜத்யா தெரிவித்துள்ளார். குடும்பப் பின்னணியில் இயக்கப்படும் இந்தப்படத்தின் கதை சல்மானுக்கு பிடித்திருந்ததாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
சல்மான் கான் நடிப்பில் சூரஜ் பார்ஜத்யா இயக்கத்தில் முதன் முறையாக 1989ஆம் ஆண்டு வெளியான 'மெய்ன் பியார் கியா' படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து சல்மான் கான் நடிப்பில், 'ஹம் ஆப்கே ஹெய்ன் கௌன்', 'ஹம் சாத் சாத் ஹெய்ன்' உள்ளிட்ட படங்களையும் சூரஜ் பார்ஜத்யா இயக்கியிருந்தார். கடைசியாக இந்தக் கூட்டணியில் 2015ஆம் ஆண்டு வெளியான 'பிரேம் ரதன் தன் பாயோ' படம் பாலிவுட்டில் வசூல் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.