பாலிவுட் முன்னணி நடிகையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான க்ளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் (Clean Slate Films) மூலம் திரைப்படங்களையும் இணையத் தொடர்களையும் தயாரித்து வருகிறார்.
சமீபத்தில் செய்தித் தளத்தின் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அனுஷ்கா ஷர்மா, ”எனது தொழில் வாழ்க்கையில் நான் பல சாவல்களை சந்தித்துள்ளேன். பல்வேறு தரப்பட்ட கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளேன். இதனால் சினிமா துறையில் கவனிக்கப்படும் பிரபலங்களில் ஒருவராக இருக்கிறேன். நடிகை என்பதையும் தாண்டி, தயாரிப்பாளர் என்ற அவதாரத்தை எடுத்துள்ளேன்.
தயாரிப்பாளராக வேண்டும் என்ற எண்ணம் எனது மனதில் வந்த போது நான் அதிக ரிஸ்க் எடுக்கிறேனோ என நினைத்தேன். ஆனாலும் துணிந்து இந்த முடிவை எடுத்தேன். பல வித்தியாசமான கதையம்சங்கள் கொண்ட படங்களை தற்போது தயாரித்து வருகிறேன்.
இது போன்ற தைரியமான முடிவுகளையும் பிரச்னைகளையும் சந்திக்கும்போதுதான், நான் இப்போது இருக்கும் நிலைக்கு தகுதியானவளாக என்னை உணர்கிறேன். அது மட்டுமல்லாது, ஒருவர் தனது திறமைக்காக அங்கீகாரம் பெருவதும் மிக முக்கியம்.
தயாரிப்பாளராக நான் மிக உறுதியாக உள்ளேன். ஆனால், நடிகை என்பதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியே. நடிப்பு தான் எனது முதல் காதல். நடிப்பைத் தவிர, ஒரு தயாரிப்பாளராகவும் என்னை வெளிப்படுத்த முடியும். எனவே, நான் இப்போது இருக்கும் இந்த தனித்துவமான இடத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.