1982 ஆம் ஆண்டு வெளியான 'ஆகாமன்' என்ற ஹிந்தி படம் மூலமாக பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அனுபம் கேர். இந்தப் படத்தைத் தொடர்ந்து 1984இல் வெளியான 'சாரண்ஸ்' என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதையும் பெற்றார் அனுபம் கேர்.
அனுபம் கேர் வில்லன், குணச்சித்திரம், காமெடி என பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஐபி, லிட்டில் ஜான், குற்றப்பத்திரிக்கை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிகராக திகழ்ந்த அனுபம் கேரால் நீச்சலில் திகழ முடியவில்லை. ஆம், சில ஆண்டுகளுக்கு முன் நீச்சல் தெரியாத அனுபம் கேர் தனக்கு நீச்சல் தெரியும் என்று கூறி படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டார். பின்னர், அது பொய்யென்று அறிந்தபின் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இது அவருக்கு பெரும் மன உளச்சலை கொடுத்திருக்கும் போலும். ஆம், அவர் சொன்ன பொய்க்கு விமோசனம் தேடும் விதமாக, 35 ஆண்டுகள் கழித்து தற்போது நீச்சல் கற்றுக்கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் அனுபம் கேர்.
இதுகுறித்து, அவர் தான் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் நீச்சல் கற்றுக்கொள்ள காரணமான பின்னணி கதையையும் குறிப்பிட்டுள்ளார். அதில், ”சாரண்ஸ் படத்துக்கு முன்னர் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகினேன். அந்தப் பட இயக்குநரிடம் எனக்கு நீச்சல் தெரியாத போதிலும் தெரியும் எனக் கூறி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். குறிப்பிட்ட அந்தக் காட்சி எடுப்பதற்கு முன் கற்றுக்கொள்ளலாம் என்று எண்ணிதான் அவ்வாறு கூறினேன்.
ஆனால், எதிர்பாராதவிதமாக எனது அறிமுக காட்சியே நீச்சலடிப்பதாக அமைந்திருந்தது. அப்போது நான் நீச்சல் அடிக்க மாட்டேன் என்பது தெரிந்த பின்னர் உடனடியாக படத்திலிருந்து நீக்கினர். அதன் பிறகு, நான் 35 வருடங்களாக நீச்சல் குளம் பக்கம் செல்லவே இல்லை. இப்போது அதை சவாலாக எடுத்துக்கொண்டு நீச்சல் கற்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். பயிற்சியில் இரண்டு வகுப்புகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் கொஞ்சமாக நீந்துவதற்கு கற்றுக் கொண்டுள்ளேன். என்னை ஆசிர்வதியுங்கள்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
அனுபம் ஹேரின் இந்த முயற்சியை ட்விட்டரில் உள்ள பலரும் பாராட்டி வரும் நிலையில், அவர் கூறிய பொய்யை குறிப்பிட்டு ட்ரோல் செய்தும் வருகின்றனர்.