சியோல் (தென் கொரியா):கொரிய நிறுவனமான எல்.ஜி, கரோனா காலத்திற்கு ஏற்ப மின்னணு முகக்கவசத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
கோவிட் -19 தொற்று நோய்க்கு மத்தியில் முகக்கவசங்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன. இச்சூழலில் எல்ஜி நிறுவனம், எல்ஜி ப்யூரி கேர் எனும் காற்று சுத்திகரிப்பான் முகக்கவசத்தை அறிமுகம் செய்துள்ளது. இது முகமூடியாகவும் செயல்படுகிறது. கையடக்க கருவியாக அறிமுகமாகி உள்ள இந்த முகக்கவசம், மின்னூட்டப்பட்டு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எல்ஜி ப்யூரி கேர் இரண்டு H13 HEPA வடிப்பான்களைப் பயன்படுத்தி காற்றை சுத்திகரிக்கிறது. இதில் இரண்டு விசிறிகள் இருக்கின்றன. காற்றின் தரத்திற்கு ஏற்ப, விசிறிகளின் வேகத்தை தானாக இந்த முகக்கவசம் கட்டுப்படுத்துகிறது.
ஒருவர் இந்த முகக்கவசத்தை அணிந்து மூச்சை வெளியே விடும்போதும், உள் இழுக்கும் போதும், இதில் பொருத்தப்பட்டுள்ள உணரிகள் காற்றின் தன்மையைக் கண்டறிந்து செயல்படும் என்று எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 820mAh மின்கல சேமிப்புத் திறன் கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், சாதாரணமாக 8 மணிநேரம் இயங்கக்கூடிய இந்த முகக்கவசம், அதிதிறன் பயன்முறையில் இயங்கும் போது இரண்டு மணிநேரம் வரை தாக்குப்பிடிக்குமாம். அதுமட்டுமில்லாமல் கிருமிகளைக் கொல்ல யூவி கதிர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.