கரோனா வைரஸ் சூழலுக்கு நடுவே உலகம் முழுவதும் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்த சைபர் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள தரவுகளை திருடுகின்றனர். அதேபோல் சர்வர்களை ஹேக் செய்து மில்லியன் டாலர்கள் கணக்கில் மிரட்டி பணம் கேட்கின்றனர்.
இந்நிலையில் ஹேக்கர்களால் ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் பல்கலைக்கழக மருத்துவமனை ஹேக் செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வரலாற்றில் நோயாளி ஒருவரின் உயிரிழப்பிற்கு ஹேக்கர்கள் காரணமாக அமைந்தது இதுவே முதல்முறையாகும். இதுகுறித்து இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாகி சியரன் மார்ட்டின் கூறுகையில், '' இந்த மரணத்திற்கு ஹேக்கர்களால் காரணம் என உறுதி செய்யப்பட்டால், சைபர் தாக்குதலுடன் நேரடியாக இணைக்கப்பட்ட முதல் மரணம் என்று பதிவு செய்யப்படும்.
ரேன்சம்வேர் தாக்குதலைப் பயன்படுத்தி அதிகமாக பணம் பறிக்கப்பட்டு வருகிறது. ரேன்சம்வேர் மூலம் நமது தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளை நிறுத்த முடியும். அதனால் மருத்துவமனையில் ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் நடத்தினால், இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.