கடந்த மே மாதம் 29ஆம் தேதி, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிபர் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்புடனான உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்தார். மேலும், அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுவந்த நிதியை, சர்வதேச அளவில் தேவைப்படும் அவசர உதவிகளுக்காக ஒதுக்கப்படும் என்றார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுத்த 30 நாள்களில் முக்கிய சீர்திருத்தங்களை உலக சுகாதார அமைப்பு செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பின் இயக்குநருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், ட்ரம்ப் எதிர்பார்த்த சீர்திருத்தங்கள் எதுவும் நடைமுறைக்கு வராததால், உலக சுகாதார அமைப்புடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
கடந்த 1945ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யுனெஸ்கோ அமைப்பிலிருந்து, அமெரிக்கா கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியேறியது. பிரபல அமெரிக்கா எழுத்தாளரும் யுனெஸ்கோவின் முதல் நிர்வாகக் குழுவின் உறுப்பினருமான ஆர்க்கிபால்ட் மக்லீஷ் யுனெஸ்கோவின் அரசியல் அமைப்பிற்கு முன்னுரையை எழுதினார்.
அதில் “போர்கள் குறித்து மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கியபோதே, பாதுகாப்பும் அமைதியும் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை மனிதர்களிடையே உருவாகத் தொடங்கியது” என்று அந்த முன்னுரையில் கூறியுள்ளார். யுனெஸ்கோவின் நிலுவைத் தொகையில் உள்ள சிக்கல், அமைப்பில் செய்ய வேண்டிய அடிப்படை சீர்திருத்தங்கள், இஸ்ரேலுக்கு எதிரான இந்த அமைப்பின் தொடர் போக்கு ஆகியவற்றைக் காரணமாகக் கூறி, அமெரிக்கா யுனெஸ்கோவைவிட்டு வெளியேறியது.
அதைத்தொடர்ந்து, கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்கா ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்தும் வெளியேறியது. ஐநா மனித உரிமைகள் ஆணையம் கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பர் ஐநாவின் 60ஆவது உச்சி மாநாட்டில் ஒருமனதாக உருவாக்கப்பட்டது. இருப்பினும், கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம், மனித உரிமைகள் கொடூரமாக ஒடுக்கப்படும் இஸ்ரேல், பலாவ், மார்ஷல் தீவுகள் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு, ஐநா மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்படக்கூடாது என்ற தீர்மானத்தில் அமெரிக்கா வாக்களித்தது.
கடந்த 2006-2009ஆம் ஆண்டு காலகட்டத்தில், "பாலஸ்தீனம் உள்ளிட்ட பிற ஆக்கிரமிக்கப்பட்ட அரபு பிரதேசங்களில், மனித உரிமை சூழ்நிலைகள்" ஆகியவை குறித்து இந்த அமைப்பு செயல்படும் முறைகளையும் விதிகளையும் மனித உரிமைகள் ஆணையம் வகுத்தது. இப்படி ஒரு முடிவை எடுத்த ஐநா மனித உரிமைகள் ஆணையம், இஸ்ரேலுக்கு எதிராக நீண்ட காலமாக செயல்படுவதாகக் கூறி, அமெரிக்க வெளியேறியது என்பது முரண்.
இவை எல்லாவற்றையும்விட உலக சுகாதார அமைப்பைவிட்டு அமெரிக்கா வெளியேறியதற்கான காரணம்தான் இதுவரை யாருக்கும் புரியவில்லை. ட்ரம்ப் முன்வைத்த அந்த முக்கிய சீர்திருத்தங்கள் என்ன என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. அதிபர் ட்ரம்ப்,”உலக சுகாதார அமைப்பு சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது” என்றும், “கரோனா வைரஸை சீனா அலுவலர்கள் முதலில் மறைக்க முயன்றபோது, இந்தத் தொற்று குறித்து சர்வதேச நாடுகளை தவறாக வழிநடத்த உலக சுகாதார அமைப்புக்கு சீனா அழுத்தம் கொடுத்தது” என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இருப்பினும், கடந்த ஜனவரி 24ஆம் தேதி, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சீனா கடுமையாகப் போராடிவருவதாக அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்திருந்தார். அதேபோல பிப்ரவரி 29ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சீனா மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைத்திருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி, குறிப்பிட்ட இடத்தில் அதிகளவிலான மக்களுக்கு நிமோனியா ஏற்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பிற்கு சீனா தெரியப்படுத்தியது. அதற்கு மறுநாளே சீனாவுக்கு உதவும் வகையில், மேலாண்மைக் குழுவை அங்கு அனுப்பியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2018 முதல் 2021ஆம் ஆண்டு வரை உலக சுகாதார அமைப்பின் 34 நபர்களைக் கொண்ட நிர்வாகக் குழுவில் அமெரிக்காவும், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழு பிப்ரவரி மாதம் 3 முதல் 6ஆம் தேதி வரைக்கூடியது. அதில் கோவிட்-19 தொற்று குறித்து, உலக சுகாதார அமைப்பின் இயக்குநருக்கு விளக்கப்பட்டது.
இருப்பினும், கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்த சீனா எடுத்த நடவடிக்கை குறித்து விவாதிக்கும் இந்தக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் முன்மொழிந்த அட்மிரல் பிரட் ஜிரோயர் பங்கேற்கவில்லை. அவர் மே 22ஆம் தேதி நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில்தான் முதல்முதலில் கலந்துகொண்டார்.
அதில் பிரட் ஜிரோயர் இதுபோன்ற தொற்றுகள் மீண்டும் ஒருபோதும் ஏற்படாமலிருக்க ஒரு பக்கச்சார்பற்ற, சுயாதீனமான, விரிவான நடவடிக்கைகளை தேவை என்பதை வலியுறுத்தினார். உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருப்பதால், முதல் முதலில் உலக சுகாதார அமைப்பில் சேர, கடந்த 1948ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த இரண்டு நிபந்தனைகளை அந்நாடு பூர்த்தி செய்ய வேண்டும்.