சென்னை பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாட்டில் செயலாளராக இருப்பவர் ராஜா குமார். இவர் சென்னை உயர் நீதிமன்றம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். இதில் “வில்லிவாக்கம் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விப்பீன் (59). இவர் ரயில்வே துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
விப்பீன் பணியிலிருக்கும்போதே சட்டப்படிப்பு படித்துள்ளார். அதனால் கடந்த ஜனவரி மாதம் பார் கவுன்சிலை அணுகி தனது பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் பணியில் இருக்கும்போது பெயரைச் சேர்க்க முடியாது என கவுன்சில் நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக வழக்குரைஞர் உலகநாதன், மோகன்தாஸ் ஆகியோர் ரூபாய் 40 ஆயிரம் கையூட்டாகத் தந்தால், பெயரை கவுன்சிலில் சேர்ப்பதாக விப்பீனிடம் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி முன்பணமாக 25 ஆயிரம் ரூபாய் விப்பீன் அளித்ததாகவும் கூறினார். பின்னர் நீண்ட நாட்களாகியும் தனது பெயரைச் சேர்க்காததால் பார் கவுன்சில் அலுவலகத்தில் முறையிட வந்தார். இதனால் சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குரைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து இது குறித்து கையூட்டு கொடுத்த விப்பீனை கைது செய்த உயர் நீதிமன்ற காவல் துறையினர், தலைமறைவான இரண்டு வழக்குரைஞர்களைத் தேடிவருகின்றனர்.