கோயம்புத்தூர்: உரிமம் இல்லாத துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த முன்னாள் ராணுவ வீரர் உள்பட இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், ஆலந்துறை காவல் துறையினர் பூலுவபட்டியிலுள்ள அரசு மதுபான கடை முன்பு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவர் 10க்கும் மேற்பட்ட மது குப்பிகளை வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ரங்கராஜை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்த நிறுத்தியபோது, நிற்காமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவரைத் துரத்திச் சென்றபோது, சென்னனூர் சாலையிலுள்ள ராம்காள் என்பவரது தோட்டத்தில் மது குப்பிகளை வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னால் சென்ற காவலர்கள் அந்த தோட்டத்தை சோதனை செய்தபோது அங்கு 18 மது பாட்டில்கள், சிங்கிள் பேரல் நாட்டு கை துப்பாக்கி ஒன்று இருந்ததைக் கண்டுபிடித்தனர். அதை பறிமுதல் செய்த காவல் துறையினர், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
ரயில் படிக்கட்டில் பயணித்த இளம்பெண் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சோக சம்பவம்!
தோட்டத்தில் கைப்பற்றப்பட்ட சிங்கிள் பேரல் துப்பாக்கி கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமாருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ராமக்காளின் உறவினரான ரஞ்சித் அவ்வப்போது அங்கு வந்து தங்கிச் செல்வதாகவும், இவர் இந்திய ராணுவத்தில் டெல்லியில் மூன்றாண்டுகள் பணிபுரிந்ததும் தெரியவந்தது.
இவர் ஒருவருடம் முன்பு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு தற்போது வேலைக்குச் செல்லாமல் இங்கு தங்கியிருப்பதையும் காவல் துறையினர் விசாரணையில் புலப்பட்டது. இதனையடுத்து மது குப்பிகளுடன் சென்ற ரங்கராஜ், உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த ரஞ்சித்குமார் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.