கோயம்புத்தூர்: இரு சக்கர வாகன விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்துள்ள நரசிபுரம் உயர்நிலை பள்ளிச் சாலையில் இரு சக்கர வாகனமும், நான்கு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது.
இதில், இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை காவல் துறையினர், விபத்து குறித்து விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர்கள் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (19), பாபு(20) என்பதும், படுகாயமடைந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த்(19) என்பதும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் மூவரும் நண்பர்கள் என்றும் விசாரணையில் காவல் துறையினர் தெரிவித்தனர். விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.