சென்னை: காவலர்கள் கொடுமைப்படுத்தியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் புதுவீடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன், ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்றுள்ளார். அப்போது, தினாட்கொம்பை சரக காவலர்கள், வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடுமையான மன உளைச்சலில் இருந்த சீனிவாசன், மறுநாள் தனது இல்லத்தில் தற்கொலைசெய்துகொண்டார். காவலர்கள் தகாத வார்த்தைகளால் பேசி கொடுமைப்படுத்தியது தான் சீனிவாசன் தற்கொலைக்கு காரணம் எனவும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் படுக தேச கட்சி சார்பாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதையடுத்து, அதனடிப்படையில் வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், நீலகிரி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.