கோயம்புத்தூர்: கரும்புக்கடையைச் சேர்ந்த கணவன், மனைவி தங்களது வளர்ப்பு மகளான 4 வயது சிறுமியைத் தொடர்ந்து தாக்கி கொடுமைப்படுத்தி வருவதாக போத்தனூர் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவலளித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த காவலர்கள் சிறுமியை மீட்டு, கணவன், மனைவி ஆகிய இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருமணம் ஆகி ஆறு ஆண்டுகளாகக் குழந்தையில்லாததால், சில மாதங்களுக்கு முன் காந்திபுரத்தைச் சேர்ந்த தம்பதியின் குழந்தையை சட்டவிரோதமாகத் தத்தெடுத்து வளர்த்து வந்தது அம்பலமானது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் காந்திபுரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 7, 4 ஆகிய வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்ததாகவும், இதில் தாய் - தந்தை கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்ததால், சிறுமிகளைப் பார்த்துக்கொள்ள முடியாமல், கரும்புக்கடையைச் சேர்ந்த நபரின் உறவினரிடம் இரண்டு சிறுமிகளை ஒப்படைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் வளர்ப்புத் தாய், தந்தை, அந்த சிறுமிகளைக் கொடுத்த நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதில் மற்றொரு 7 வயது சிறுமியையும் காவல் துறையினர் மீட்டு, இரண்டு குழந்தைகளையும் சேர்த்துக் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாகச் சிறுமிகளின் பெற்றோர், வளர்ப்பு தாய், தந்தை உள்ளிட்ட 7 பேர் மீது சட்டவிரோதமாகக் குழந்தைகளை தத்துக் கொடுத்தது, பெண் குழந்தைகளை துன்புறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு, செய்து துன்புறுத்தப்பட்ட சிறுமியின் வளர்ப்புத் தாய் உள்பட 4 பேரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிறுமிகளின் தாய், தந்தை உள்பட மூவரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.