தேனி: ரசீது(கிராஃப் ரசீது) கொண்டு பல கோடி ரூபாய் மோசடி செய்த 'கார்டம்மம் குரோவர் ஃபார்எவர் பிரைவேட் லிமிடெட்' நிறுவன இயக்குநர்கள் உள்பட நான்கு பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், போடி புதுக்காலணி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் என்ற ஆறுமுகம். இவர் 'கார்டம்மம் குரோவர் ஃபார்எவர் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் ஏலக்காய் விற்பனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரது மனைவி மருதத்தாய் சந்தியா, மகன் பாலாஜி உள்பட 10 நபர்களும் ஏலக்காய் விற்பனை நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர்.
இவர்களது ஏலக்காய் விற்பனை நிறுவனத்தில் மேலாளராகக் கேரளாவைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த விற்பனை நிலையத்தில் விவசாயிகளும், வியாபாரிகளும் கொண்டு வரும் ஏலக்காய்களைப் பெற்றுக்கொண்டு, அதற்கு ஆதாரமாக ரசீது கொடுப்பது வழக்கம்.
போலியாக கொடுக்கப்பட்ட ரசீது இதில், ஏல விற்பனைத் தொகையை வசூல் செய்யும் வரையில், அந்த ரசீதின் மூலம் கடனளிப்பவர்களிடம் கடன் பெற்று, ஏலக்காய் பதிவு செய்தவர்களுக்குத் தருவது வழக்கம். விற்பனை முடிந்ததும் கடனளித்தவர்களுக்கு 2 விழுக்காடு தரகுத் தொகையுடன் நிறுவனம் வழங்க வேண்டும் என்பது நடைமுறை.
போலி ரசீது மூலம் கோடிக்கணக்கில் மோசடி
இச்சூழலில், போடி குப்பி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வடிவேல் என்பவரிடம், ஆறுமுகம், அவரது மனைவி மருதத்தாய் சந்தியா, மகன் பாலாஜி ஆகியோர் மார்ச் மாதம் முதல் வெவ்வேறு தேதிகளில் ஏலம் விடப்பட்ட 1,468.200 கிலோ ஏலக்காய்களுக்கான ரசீதை வழங்கி, ரூ.48 லட்சம் பெற்றுள்ளனர்.
வடிவேலிடம் கடன் வாங்கியது போல முருகன், சிவகாமி, ராமகிருஷ்ணன் என பல்வேறு நபர்களிடம் சேர்த்து ஒரு கோடியே 86 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை ரசீது மூலம் கடன் பெற்றுள்ளனர். இதற்கிடையே ஏலக்காய் விற்பனை நிறுவன மேலாளரான கேரளா மாநிலம் வண்டன்மேடு பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் தரப்பில் திவால் அறிக்கை வெளியிடப்பட்டன.
ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு
பணம் வழங்கி பல மாதங்கள் ஆன நிலையில், ஆறுமுகத்திடம் ரசீதைக் காண்பித்து பணத்தைத் திரும்பத் தரும்படி வடிவேல் கேட்டுள்ளார். அதற்கு ஏலக்காய் விற்பனை நிறுவன மேலாளர் தியாகராஜனிடம் முன்னமே பணம் கொடுத்துவிட்டேன் எனக் கூறிய ஆறுமுகம் குடும்பத்தினர் வடிவேலுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் ஏலக்காய் விற்பனை நிறுவன நிர்வாக இயக்குநர் ஆறுமுகம், அவரது மனைவி மருதத்தாய் சந்தியா, மகன் பாலாஜி, மேலாளர் தியாகராஜன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே போலியான ரசீதுகளைத் தயாரித்து பலரிடம் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளதாக, ஆறுமுகம் தனது மேலாளர் தியாகராஜன் மீதும் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையிலும் தியாகராஜன் மீது 4 பிரிவுகளில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏலக்காய் விற்பனை நிறுவனத்தை மையமாக வைத்து, கோடிக்கணக்கில் நடைபெற்ற பண மோசடியில் மேலாளர் தியாகராஜனைக் கைதுசெய்து விசாரணை செய்தால் தான் உண்மை வெளிவரும் என்று கூறப்படுகிறது.