பிரான்ஸ்: உக்ரைனில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியபோது, உக்ரைனிய பெண்களை ரஷ்ய ராணுவ வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக செய்திகள் வெளியாகின. ரஷ்ய வீரர் ஒருவர் உக்ரைன் பெண்களை வன்கொடுமை செய்ய தனது மனைவியிடம் அனுமதி பெற்றது தொடர்பான செய்திகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைனில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை கண்டித்து, பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் ஒருவர் அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
தனது உடலில் உக்ரைன் நாட்டு கொடியுடன், "STOP RAPING US"என்று வண்ணம் தீட்டியிருந்த அப்பெண், விழாவில் இருந்த சிவப்பு நிற கம்பளத்தில் ஓடினார். 'எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதை நிறுத்துங்கள்' என்று முழக்கமிட்டார். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சூழ்ந்து, ஆடையை போர்த்தி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, சர்வாதிகாரிகளுக்கு திரைப்பட இயக்குனர்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க:பாகிஸ்தானில் சீக்கியர்கள் சுட்டுக்கொலை!