ஜகார்த்தா (இந்தோனேஷியா): இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு (ASEAN-India summit) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (செப் 6) இந்தோனேஷியாவுக்குச் சென்றார். பின்னர், ஆசியன் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார்.
அப்போது, திமோர்-லெஸ்டே நகரில் இந்திய தூதரகம் அமைக்கப்பட உள்ளதாகவும், ஆசியான் - இந்தியா ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக 12 அம்ச திட்டத்தையும் பிரதமர் வெளியிட்டார். இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்திய தூதரகத்தை டிலி மற்றும் திமோர் - லெஸ்டே நகரில் அமைக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
இந்த முடிவானது, இந்தியா - ஆசியான் உடன் கொண்டு உள்ள ஒத்துழைப்பையும், திமோர்-லெஸ்டே உடனான உறவின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த முடிவை திமோர்-லெஸ்டே மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகள் மகிழ்ச்சியாக வரவேற்று உள்ளனர்” என தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தாம் பக்சி வெளியிட்டு உள்ள 'X' வலைதளப் பதிவில், “கிழக்கை நோக்கி, டெல்லி முதல் டிலி வரை. டிலி மற்றும் திமோர்-லெஸ்டேவில் இந்திய தூதரகம் திறக்கப்படும் என ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்” என தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு எனப்படும் ஆசியான் கூட்டமைப்பில், கடந்த 2022ஆம் ஆண்டு தன்னை ஒரு பார்வையாளராக இணைத்துக் கொண்ட திமோர்-லெஸ்டே, அதன் பின்னர் முழு நேர உறுப்பினராகவும் தன்னை இணைத்துக் கொண்டது.