காத்மண்டு: நேபாள நாடாளுமன்றத்திற்கு கடந்த நவம்பர் மாதம் 20-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 275 உறுப்பினா்கள் கொண்ட இந்த தேர்தலில் எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மையான 138 உறுப்பினர்கள் கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. பிரதமர் ஷேர் பகதூர் துபா தலைமையிலான நேபாள காங்கிரஸ் கட்சி 89 இடங்களில் வென்றிருந்த நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசு அமைக்க முனைப்பு காட்டி வந்தது.
அந்த வகையில் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹல் எனும் பிரசந்தா தலைமையிலான சிபிஎன் மாவோயிஸ்டு (Communist Party of Nepal (Maoist Centre) கட்சி உள்பட 5 கட்சிகள் கூட்டணியில் ஆட்சி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. 5 ஆண்டுகள் பதவி காலத்தில் இரண்டரை ஆண்டுகள் பிரதமராக துபாவிடம் பிரசந்தா கேட்டுக்கொண்டதாகவும் அதனை துபா ஏற்கவில்லை எனவும் தகவல் வெளினானது.
இந்நிலையில், பிரசந்தாவின் சிபிஎன் மாவோயிஸ்டு கட்சி தூபா தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறியது. திடீர் திருப்பமாக முன்னாள் பிரதமர் கேபி சர்மா ஒலியின் சிபின்-யுஎம்எல் கட்சி மற்றும் மற்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளை பிரசந்தா செய்து வந்தார். அதன்படி சிபிஎன் யுஎம்எல், சிபிஎன் எம்சி, ஆர்எஸ்பி, ஆர்பிபி, ஜேஎஸ்பி, ஜனமத் மற்றும் நகரிக் உன்முக்தி கட்சி ஆகிய கட்சிகளுடன் புதிய கூட்டணி உருவானது.
இந்த கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தேவையான 165 உறுப்பினர்கள் உள்ளனர். பிரசந்தா தலைமையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிரசந்தா, கேபி சர்மா ஒலி மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தினர். இதில் சுழற்சி முறையில் அரசாங்கத்தை வழிநடத்துவது என பிரசந்தாவுக்கும், கேபி சர்மா ஒலிக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டது. மேலும் பிரசந்தாவின் கோரிக்கையின்படி முதல் வாய்ப்பிலேயே அவரை பிரதமராக்க சர்மா ஒலியும் ஒப்புக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து பிரசந்தா தலைமையில் புதிய அரசை அமைப்பதற்கான சட்ட ஆவணத்தில் கூட்டணி கட்சியின் எம்.பிக்கள் 165 பேரும் கையெழுத்திட்டனர். பிரதமராக நியமனம் உடனடியாக அதிபர் மாளிகை சென்று அதிபர் பித்யாதேவி பண்டாரியிடம் இந்த கடிதத்தை சமர்ப்பித்த பிரசந்தா, ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக்கொண்ட அதிபரும், நாட்டின் புதிய பிரதமராக பிரசந்தாவை நியமித்தார். இன்று மாலை 4 மணிக்கு பதவி ஏற்பதாக பின்னர் அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள பிரதமராக பிரசந்தா தேர்வு செய்யப்படுவது இது 3-ஆவது முறை.
இதனிடையே, நேபாள பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரசந்தாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். "நேபாள பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரசந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், இந்தியா - நேபாளம் இடையேயான தனித்துவமான உறவு, கலாச்சார இணைப்பு, நட்பை மேம்படுத்த இணைந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தினசரி கரோனா பாதிப்புகளை மறைக்கும் சீனா