பெஷாவர்: பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. இந்த நிலையில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் இரு சீக்கிய தொழில் அதிபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்தப் படுபாதகச் செயலை செய்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பாகிஸ்தானில் சீக்கியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலின் சுவடி அழிவதற்குள் தற்போது இரண்டு தொழிலதிபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் இந்தியப் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தக் கொலையில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தானில் சீக்கியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துகாணப்படுகிறது. 2018ஆம் ஆண்டு சீக்கியத் தலைவர் சரண்ஜித் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தொடர்ந்து, செய்தியாளர் ரவீந்தர் சிங் 2020இல் கொல்லப்பட்டார். முன்னதாக 2016ஆம் ஆண்டு தெரிக் இ இன்சாப் நாடாளுமன்ற உறுப்பினர் சோரன் சிங் பெஷாவரில் கொல்லப்பட்டார். சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி பாகிஸ்தானில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட தாக்குதல்கள் அதிகரித்துகாணப்படுவது தெரியவருகிறது.
இதையும் படிங்க: சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரி காலணிகளைத் துடைத்த முன்னாள் முதலமைச்சர்!