டோக்கியோ (ஜப்பான்):புத்தாண்டு தினத்தன்று திங்கட்கிழமை (ஜன.01) ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. திங்கட்கிழமை ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 57 பேர் உயிரிழந்து உள்ளதாக ஜப்பான் அரசு ஊடகம் (NHK TV) தெரிவித்து உள்ளது.
ஜப்பானின் மேற்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இஷிகா மாகாணத்தின் நோடா தீபகற்பத்தில் அங்குள்ள உள்ளூர் நேரத்தின் படி மாலை 4:10 மணி அளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீண்டும் வலுவான நிலநடுக்கம் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை 24 மணி நேரத்திற்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டது. நேற்று (ஜன.02) நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சாலை வழியாக அணுக முடியாத அளவிற்குச் சாலை சேதமடைந்திருப்பதாகப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஜப்பான் ராணுவத்தினர் உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்ட போது, நிலநடுக்கத்தால் சேதமடைந்த வீடுகள் தீபற்றி எரிந்து கொண்டிருந்தன. வஜிமா நகரில் 25 வீடுகள் தீக்கிரையாகின. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என கிஷிடா தெரிவித்தார்.