கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலையின் ‘காளி’ பட போஸ்டர் சர்ச்சையில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து அவர் மீது இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக டெல்லி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த தனது நிலைபாட்டிலிருந்து விலக மாட்டேன் என லீனா தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
லீனா வெளியிட்ட போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் பால் LGBTQ+ சமூகத்தின் வானவில் கொடியை பிடிப்பது போன்றும் இருந்தது. தற்போது லீனாவின் ஆவணப்படம் கனடாவின் ஆஹா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ‘ரிதம்ஸ் ஆஃப் கனடா’ என்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த படத்தின் சர்ச்சை போஸ்டரை உடனே நீக்குமாறு கனடாவில் உள்ள இந்திய உயர் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, இந்திய உயர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "கனடாவின் ஆஹா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக 'காளி' ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதன் போஸ்டர் இந்து மதக் கடவுளை அவமதிப்பதாக உள்ளது என கனடா வாழ் இந்துக்கள் புகார் அளித்துள்ளனர்.
மேலும், பல்வேறு இந்து அமைப்புகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனடா அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த நிகழ்ச்சி ஒருங்கிணப்பாளர்களிடம் ‘காளி’ படம் தொடர்புடைய அனைத்தையும் திரும்பபெறவேண்டும்” என வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்.ராஜா நன்றி: கனடாவின் ஓட்டோ இந்திய உயர் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு பாஜக தலைவர் ஹெச். ராஜா ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். லீனாவிற்கு எதிராக பல வலது சாரி அமைப்புகள் எதிர்ப்பு குரல் தெரிவித்த நிலையில் பாஜக சார்பில் ஹெச். ராஜாவும் எதிர்ப்பை பதிவு செய்தார்.
அதில், “காளி தேவியை இழிவுபடுத்தும் லீனா மணிமேகலையின் அசிங்கமான முயற்சியை தடுத்து நிறுத்திய ஒட்டாவா இந்திய உயர் ஆணையத்திற்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். லீனா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுத்ததற்காக இந்தியாவைச் சேர்ந்த இந்துத் தலைவர்களுக்கும், கனடாவில் உள்ள இந்துக் குழுக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:இந்து மதத்தை அவமதித்ததாக இயக்குநர் லீனா மணிமேகலை மீது புகார்