கரோனா வைரஸ் காரணமாக, விளம்பர வருமானங்களை ஊடகங்கள் இழந்து வரும் நிலையில், ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வெளியிட்டு டிஜிட்டல் தளங்கள் வருமானம் ஈட்டி வருகின்றன. பத்திரிகை துறை அதிகப்படியான நஷ்டத்தை சந்தித்ததால், ஆஸ்திரேலியா அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஆஸ்திரேலியா செய்தி வலைதளங்களின் செய்திகள், அதன் லிங்க்குகள் ஆகியவற்றை தங்களின் தளங்களில் வெளியிடுவதற்குக் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தைக் கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்தன.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் பேஸ்புக் பக்கத்தில் எந்தவிதமான ஊடக செய்திகளையும் பகிர முடியாது என அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பேஸ்புக்கின் உலகளாவிய செய்தி கூட்டாண்மை துணைத் தலைவர் காம்ப்பெல் பிரவுன் கூறுகையில், "ஆஸ்திரேலியாவில் இயற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தால், எங்கள் தளத்திற்கும் வெளியீட்டாளர்களுக்கும் இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பேஸ்புக் எந்தவொரு செய்தி உள்ளடக்கத்தையும் திருடுவதில்லை. வெளியீட்டாளர்கள் தங்கள் கதைகளை பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளத் தேர்வு செய்கிறார்கள். விரைவில், ஆஸ்திரேலியாவில் மீண்டும் செய்திகள் பகிரும் வசதி கொண்டு வரப்படலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அரசுக்குத் துணை போகும் ‘கூ’ செயலி - யாருக்கானது இது?