தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா தடுப்பு மருந்து விநியோகத்தை யுனிசெப் வழிநடத்தும்!

கோவிட்-19 தடுப்பு மருந்தின் கொள்முதலையும் விநியோகத்தையும் யுனிசெப் அமைப்பு வழிநடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

UNICEF
UNICEF

By

Published : Sep 7, 2020, 5:22 PM IST

உலகெங்கும் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் தற்போது கரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்தத் தொற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சவால் ஏற்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சர்வதேச அளவில் பல ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.

இதுவரை ரஷ்யா ஸ்புட்னிக் V என்ற தடுப்பு மருந்தை மக்கள் மீது பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், சீனாவும் மூன்று தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், இந்தத் தடுப்பு மருந்துகளின் மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனைகள் இன்னும் நிறைவடையவில்லை. இதன் காரணமாக சர்வதேச அளவில் பல ஆராய்ச்சியாளர்களும் தடுப்பு மருந்துகள் குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

அதேநேரம், மறுபுறம் உலகெங்கும் உருவாக்கப்பட்டுள்ள எட்டு தடுப்பு மருந்துகள் தற்போது மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளன. அதிலும் குறிப்பாக, பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து, அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து ஆகியவற்றின் இறுதிக்கட்ட சோதனைகள் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றின் சோதனைகளை வெற்றிகரமாக முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்படும் போதும், பணக்கார நாடுகள் இந்தத் தடுப்பு மருந்துகளை அதிகளவில் வாங்கி குவிக்கும் என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக உள்ளன. அவ்வாறு நிகழ்ந்தால் நடுத்தர மற்றும் ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றன.

இந்நிலையில், கரோனா தடுப்பு மருந்து கொள்முதலை யுனிசெப் வழிநடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யுனிசெப் அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில், "கோவிட்-19 தடுப்பு மருந்தின் உலகளாவிய விநியோகத்தை வழிநடத்துவதற்கும், இந்த தொற்றுநோயின் மோசமான கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

உலகிலுள்ள 92 நடுத்தர மற்றும் ஏழை நாடுகளில் தடுப்பு மருந்தின் கொள்முதல் மற்றும் விநியோகத்தை யுனிசெப் அமைப்பு மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: IFA Berlin 2020: 200 மில்லி விநாடிகளில் பதிலளிக்கும் சென்சார் கருவி

ABOUT THE AUTHOR

...view details