கொரோனா வைரஸ் சீனாவை ஆட்டிப்படைக்கிறது. இது மற்ற உலக நாடுகளுக்கும் பரவி அச்சுறுத்திவருகிறது. உலக சுகாதார அமைப்பு, அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. பல்வேறு நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சீன அரசோ கொரோனாவைக் கட்டுப்படுத்த திணறிவருகிறது. இதனால், சீனாவில் வர்த்தகம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகப் பொருளாதார சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரம் கொரோனாவால் முற்றிலும் முடங்கிபோய் கிடக்கிறது. கொரோனாவுக்கு எதிராக இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால், சீனாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டுதான் செல்கிறது.