மெடிட்டரேனியன் கடலில் உள்ள ஜிப்ரால்டர் பகுதி, தற்போது பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், ஜிப்ரால்டர் அருகே சென்ற 'க்ரேஸ்-1' என்ற ஈரான் கப்பலை, ஜிப்ரால்டர் கடற்படையினர் கடந்த ஜூலை 4ஆம் தேதி கைப்பற்றினர்.
அந்த கப்பல், சிரியா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பொருளாதாரத் தடையை மீறி எண்ணெய் எடுத்துச் சென்றதாக பிரிட்டன் குற்றம்சாட்டியது. பின்னர், இதுதொடர்பாக ஜிப்ரால்டர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், ஈரான் எண்ணெய் கப்பலை 30 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹோர்முஸ் வழியாகப் பயணித்த 'ஸ்டினோ எம்போரியோ' என்ற பிரிட்டன் எண்ணெய் கப்பலை, ஈரான் சிறைபிடித்து. இதனிடையே, ஜிப்ரால்டரில் கைப்பற்றப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க வலியுறுத்தியிருந்தது.
ஐரோப்பிய ஒன்றிய விதிகளை காரணம் காட்டி அமெரிக்காவின் இந்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த ஜிப்ரால்டர் அரசு, ஈரான் கப்பலை விடுவிக்க கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஜிப்ரால்டரிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல் அட்ரியன் தர்யா இந்நிலையில், இந்த கப்பலானது நேற்று ஜிப்பரால்டரில் இருந்து புறப்பட்டது. 'அட்ரியன் தர்யா' (Adrian Darya) என பெயர் மாற்றத்துடன் தன் பயணத்தைத் தொடங்கியுள்ள இந்த கப்பல், பெயர் குறிப்பிடாத பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதாக சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.