இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், பக்கிங்ஹாம் அரண்மனையில் வசித்துவருகிறார். அங்கிருந்தப்படியே அரச பணிகளை அவர் கவனித்துவருகிறார். இந்நிலையில் அங்கு பணிபுரியும் அரச குடும்பத்தின் உதவியாளர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு அறிகுறிகள் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். இந்நிலையில் 93 வயதான மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். மேலும் தனது இருப்பிடத்தை பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து விண்ட்சர் கோட்டைக்கு மாற்றிக் கொண்டார்.
இதுமட்டுமின்றி அரண்மனையில் ஒவ்வொரு உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி அரண்மனை பணிகளை கவனித்துவருகின்றனர். அடுத்த மாதம் (ஏப்ரல்) 21ஆம் தேதி மகாராணி தனது 94ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில் 98 வயதான தனது கணவர் இளவரசர் பிலிப்புடன் தற்போது வசிப்பிட அரண்மனையை மாற்றி உள்ளார். இந்த தகவலை உறுதிப்படுத்திய அரண்மனை செய்தித் தொடர்பாளர், கரோனா பாதித்த பணியாளர் பற்றிய தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மேலும் மகாராணி வசிப்பிட அரண்மனையை மாற்றியதை ஒப்புக்கொண்டார். பக்கிங்ஹாம் அரண்மனையில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வசித்துவருகின்றனர். கரோனா வைரஸ் இங்கிலாந்தில் வேகமாக பரவிவருகிறது.