என்னதான் இப்போது அமெரிக்காவில் பணியாற்றினாலும் அபிஜித் பானர்ஜிக்குப் பூர்வீகம் மேற்கு வங்கம்தான். 1961ஆம் ஆண்டு தீபக் - நிர்மலா இணைய தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தான் இந்த அபிஜித் பானர்ஜி. இவரது தந்தை கொல்கத்தா மாநில கல்லூரியில் பொருளாதார துறையின் தலைவராக பணிபுரிந்தார். இவரது தாய் கொல்கத்தா சமூக அறிவியல் ஆய்வு மையத்தில் பேராசிரியாகப் பணிபுரிந்தார்.
புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பழமொழிக்கு ஏற்ப அபிஜித்தும் ஆரம்பம் முதலே படிப்பில் தூள் கிளப்பினார். குறிப்பாக அவரது தந்தை தீபக்கைப் போல இவருக்கும் பொருளாதாரத்தில் அலாதிப் பிரியம். 1979ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த அவர் கல்லூரியில் படிக்கச் சிறிதும் யோசனையின்றி தேர்ந்தெடுத்த துறை பொருளாதாரம்.
இவரது பெற்றோரும் இவருக்குத் துணையாக இருக்க 1981ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் தனது (B.S) இளங்கலையை முடித்தார். அதைத்தொடர்ந்து புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 1983ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். பொருளாதாரத்தில் மீதான அவரது காதல் தொடர அமெரிக்கா சென்று உலக புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை முடித்தார்.