இலங்கையில் நான்கு தேவாலயங்கள், மூன்று நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட எட்டு இடங்களில் நேற்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 290 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்பதால் அங்கு பெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இன்று கொழும்பு விமானநிலையத்தில் ஒன்பதாவது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நாடு பீதியில் உறைந்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக அந்நாட்டின் முன்னணி வர்த்தகரான இப்ராஹிம் ஹாஜியார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது மகன் தலைமறைவாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 13 பேர் நேற்று மாலை வரை கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், இவர்களிடம் பல கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன எனவும் இலங்கை காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரூவன் குணசேகரா தெரிவித்தார். அதுமட்டுமின்றி இவர்களில் சிலர் தற்கொலைத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தனர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, கொழும்பு சங்கிரிலா ஹோட்டலில் இருந்து இஸ்லாமிய ஆண் ஒருவரின் தலை, உடல் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு கட்டுவபிட்டி தேவாலயத்திலிருந்தும் ஆண் ஒருவரின் தலைப்பகுதி மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
இதேபோல், குண்டு வெடிப்பு நடைபெற்ற மட்டக்களப்பு தேவாலயத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உடல் சிதைவடைந்த நிலையில் தலைப்பகுதியுடன் இஸ்லாமிய ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது எனவே இந்தத் தாக்குதல்களில் பெரும்பாலானவை தற்கொலை தாக்குதல்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்று இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே தெரிவித்துள்ளார்.