ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தானது கடந்த மாதம் 5ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நீக்கப்பட்டது. மேலும், அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.
இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துவரும் பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரக, வணிக உறவுகளை முறித்துக்கொண்டது. மேலும், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக்குவது குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரமாக முயன்று வருகிறது.
இதனிடையே, காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசை கடுமையாக சாடி பரபரப்பை ஏற்படுத்திவரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிக்கொண்டால் பிராந்திய அளவில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவின் ஹவுட்டன் நகரில் உள்ள வட அமெரிக்க இஸ்லாமியச் சமூகத்தினரிடம் காணொலி மூலம் உரையாற்றிய இம்ரான் கான், ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கொண்டுவந்துள்ள மாற்றங்கள் ஐநா தீர்மானத்துக்கு எதிரானதென்றும், அங்கு அறங்கேறிவரும் மனித உரிமை மீறல்களிலிருந்து உலகை திசைதிருப்ப பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு வெறுப்பு மற்றும் இந்து ஆதிக்க சித்தாந்தங்களிலிருந்து உருவான ஆர்எஸ்எஸ் அமைப்பை பின்பற்றுவதாகவும் இம்ரான் கான் குற்றம்சாட்டினார்.