காத்மாண்டுவில் புதன்கிழமை நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் மட்டுமே பேசினாலும், அனைத்து உறுப்பினர்களும் பிரதமராக ஒலி தொடர்ந்திருப்பது குறித்து தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பெஷல் கதிவாடா, மாத்ரிகா யாதவ் மற்றும் லீலாமணி போக்ரெல் ஆகிய மூன்று தலைவர்கள் ஒலியிடம் ராஜினாமாவைக் கோரினார்கள் என்றும் நந்தா குமார் பிரசேன் மற்றும் யோகேஷ் பட்டரை ஆகிய இருவரும் அவரது செயல்பாட்டு முறையை சரிசெய்யும்படி அவரை வலியுறுத்தியதாக தி காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டம், உறுப்பினர்களின் கருத்துக்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டு வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவுக்கு ஆதரவானவராகக் கருதப்படும் ஒலியின் நடவடிக்கைகள், சமீப காலங்களில் இந்தியா-நேபாள உறவுகளில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த மாதம், ஒலி இந்திய எல்லைக்குட்பட்ட கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட இடங்களை நேபாளத்துடன் இணைத்து நாட்டின் புதிய அரசியல் வரைப்படத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
கைலாஷ் மானசரோவர் செல்லும் யாத்ரீகர்களுக்காக கட்டப்பட்ட லிபுலேக் வரை செல்லும் சாலையை இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மே மாதம் திறந்து வைத்ததை அடுத்து இது நிகழ்ந்தது. ஒலியின் நடவடிக்கையைத் தொடர்ந்து, அதை “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று இந்தியா வெளியுறவு அமைச்சகம் பதிலளித்தது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை, தன்னை பிரதமர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்ய இந்தியா முயற்சிப்பதாக ஒலி குற்றம் சாட்டினார்.
அப்போது, "நேபாள அரசியலின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் டெல்லியுடன் இணைந்து எல்லைப் பிரச்சினையில் எனது நிலைப்பாட்டிற்காக என்னை வெளியேற்ற முயற்சிக்கிறார்கள்" என்று ஞாயிற்றுக்கிழமை காத்மாண்டுவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒலி கூறியுள்ளார். மேலும், "என்னை வெளியேற்றுவதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று யாரும் நினைக்கக்கூடாது" என்றார்.
அரசியல் நோக்கர்களின் கூற்றுப்படி, ஒலியின் நடவடிக்கைகள் நாட்டில் கோவிட்-19 தொற்றுநோயை மோசமாக கையாளும் விதத்தினால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வந்த எதிர்ப்பிலிருந்து உருவாகின்றன, மேலும் அவர் இவற்றை திசைதிருப்பும் தந்திரங்களாகப் பயன்படுத்துகிறார்.
செவ்வாக்கிழமை நடந்த நிலைக்குழுவின் கூட்டத்தில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத் தலைவரும், முன்னாள் பிரதமருமான புஷ்பா கமல் தஹால் “பிரசந்தா” மற்றும் மூத்த தலைவர்களான மாதவ் குமார் நேபாள், ஜலா நாத் கானல், பாம்தேவ் கவுதம், நாராயண் காஜி ஸ்ரேஸ்தா ஆகியோரோடு மேலும் 11 உறுப்பினர்கள் ஒலியை பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும்படி கோரினார்கள்.
புதன்கிழமை நிலைக்குழு கூட்டத்தைத் தொடர்ந்து, ஒலி தனது சொந்த கட்சிக்குள்ளேயே சிறுபான்மை பலத்துடன் உள்ளார், 45 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் 15 பேர் மட்டுமே அவருக்கு ஆதரவளித்துள்ளனர் என்று காத்மாண்டுவை சேர்ந்த அரசியல் பொருளாதார நிபுணர் ஹரி ரோகா ஈடிவி பாரத்-திடம் தெரிவித்தார்.
"அவர்கள் தொடர்ந்து தன்னை தூண்டிவிட்டால், தான் கட்சியைப் பிளவுப்படுத்தப் போவதாக பிரதமர் கூறுகிறார்," என்று ரோகா நேபாளத்தின் தலைநகரிலிருந்து தொலைபேசியில் பத்திரிகையாளரிடம் கூறினார்.