சமீப காலங்களாக ஸ்மார்ட்ஃபோன்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஸ்மார்ட்ஃபோன் பற்றிய விழிப்புணர்வுகள் மக்களிடம் இருந்தாலும் அவற்றை முறையாகப் பயன்படுத்தத் தவறுகின்றனர். அந்த தவறினால் 14 வயது சிறுமியின் உயிர் தற்போது பறிக்கப்பட்டுள்ளது.
கஜகஸ்தானினில் உள்ள பாஸ்பேட் கிராமத்தில் வசிப்பவர் 'ஆல்வா அசெட்கிஸி அப்சல்பெக்' என்னும் 14 வயது சிறுமி. இவர் நேற்று இரவு தூங்கும் போது செல்ஃபோனில் பாட்டுக் கேட்டுக்கொண்டே சார்ஜ் போட்டுவிட்டு அருகில் வைத்து தூங்கியுள்ளார்.
இந்நிலையில் காலை நீண்ட நேரம் ஆகியும் சிறுமி அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்து மகளின் அறைக்குள் சென்று அவரது தாய் பார்த்துள்ளார். அப்போது சிறுமி மயக்க நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி, ஏற்கெனவே இறந்து விட்டார் என அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர்.