உலகளாவிய தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு மலேசியாவில் தீவிரமடைந்துவருகிறது. இதுவரை அந்நாட்டில் 27 ஆயிரத்து 805 பேர் பாதிக்கப்படும், 236 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இதனையடுத்து, நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டுமென ஆளும் பிரிபூமி பெர்சத்து மலேசிய கட்சி (பெர்சத்து) செயல் தலைவரும், பிரதமருமான முகைதீன் யாசின் முன்மொழிந்தார்.
பிரதமரின் இந்த கோரிக்கையை மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா நேற்று மறுதலித்தார். இதனையடுத்து, அவரை உடனடியாகப் பதவி விலக வேண்டுமென நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மலேசியாவில் அவசரகால ஆட்சியை அமல்படுத்துவது தேவையற்றது என்றும் கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த போதுமான சட்டங்கள் உள்ளன என்றும் அரசியலாளர்களும், சட்ட வல்லுநர்களும் கூறிவருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த மலேசியாவின் அறிவியல் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் அஹ்மத் ஃபௌசி அப்துல் ஹமீத், "அவசர நிலையைக் கோரும் பிரதமரின் அறிவிப்பை நீங்கள் எந்தவிதத்தில் அதைப் பார்த்தாலும், ஆட்சியைத் தொடர வேண்டும் என்ற அவரது எண்ணம் வெளிப்படும். நாடாளுமன்றத்தில் இரண்டு இருக்கைகள் மட்டுமே வைத்திருக்கிற அவர் பெரும்பான்மையை இழந்துவிட்டவர் ஆவார்.
அவரது இந்த அறிவிப்பானது வேறு சில அரசியல் காரணங்களைக் கொண்டிருக்கும் என்பதை அனைவராலும் உணர முடியும். மலேசியாவை சர்வாதிகாரத்திற்குள் தள்ளும் அபாயங்கள் அதில் உள்ளன" என்றார்.
அவசரகால நிலைக்கான அழைப்பை மலேசிய மாமன்னர் நிராகரித்த போதிலும், முகைதீனின் அரசு ஆட்சியைத் தொடர அனுமதி அளித்திருப்பது கவனிக்கத்தக்கது.