தெஹ்ரான் :ஈரான் தலைநகர் தெஹ்ரானின் கிழக்கே உள்ள அப்சர்த் எனும் கிராமத்தின் வழியாக அந்நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சேன் பக்ரிசாதே காரில் சென்றுக்கொண்டிருக்கையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வெடிக்குண்டுகள் மூலம் அவரது காரை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய ஐந்து பேர் காரின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த மொஹ்சேன் சிகிச்சைப்பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மொஹ்செனின் காவலர்கள் உள்பட மேலும் சிலர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷாரிப் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரானின் அணு விஞ்ஞானிகள் சிலர் கொல்லப்பட்டபோது அதற்கு இஸ்ரேல் தான் காரணம் என குற்றம்சாட்டியது. ஆனால் அதனை இஸ்ரேல் அரசு நிராகரித்தது.
அதேபோல், 2018ஆம் ஆண்டு இஸ்ரேல் மூலம் பெறப்பட்ட ரகசிய அறிக்கையின்படி மொஹ்சேன் தலைமையில் ஈரான் அரசு அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தைச் செயல்படுத்தி வருதவதாக தகவல் வெளியானது. அப்போது நாட்டு மக்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மக்கள் 'மொஹ்சேன் பக்ரிசாதே' எனும் பெயரை நினைவில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
முன்னதாக 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா 2018ஆம் ஆண்டு வெளியேறியது. இதனை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து வந்தார். எனவே, ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறி ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் உற்பத்தியை அதிகரித்தது. ஈரானின் இந்த நடவடிக்கை உலக நாடுகள் இடையே கவலையை ஏற்படுத்திய நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க படையினரால், ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டு, இருநாடுகள் இடையே பதற்றம் நிலவியது. இந்நிலையில் மேலும் ஒரு மூத்தத் தலைவர் கொல்லப்பட்டிருப்பது, ஈரான்-இஸ்ரேல் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பன்றி இறைச்சியை சாலையில் வீசி தைவான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம்!