மியான்மரில் புதிதாக ஆட்சியில் அமர்ந்த அரசுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இச்சூழலில், மியான்மர் அரசு ஆலோசர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்டோரை ராணுவம் சிறைபிடித்து வைத்தது. இதனால், அந்நாட்டில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ராணுவத்தின் கையில் மியான்மர் உள்ளது பெரும் சலசலப்பை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் உரிய அனுமதியின்றி விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த சில நாள்களாகவே மியான்மரின் முக்கிய நகரங்களில் மக்கள் வீதிகளில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மியான்மரின் பல நகரங்களில், ஆயுதமேந்திய போர் வாகனங்கள் சாலைகளில் தென்பட்டதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி, நள்ளிரவு ஒரு மணி முதல் கிட்டத்தட்ட நாடுமுழுவதும் முழுமையாக இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.