அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆயிரத்து 480 பேர் மரணித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் இது மிக மோசமான உயிரிழப்பாக பார்க்கப்படுகிறது. அதாவது வியாழக்கிழமை இரவு 8:30 மணி முதல் வெள்ளிக்கிழமை அதே நேரம் வரை ஆயிரத்து 480 இறப்புகள் கணக்கிடப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, அமெரிக்காவில் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதிலிருந்து இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது ஏழாயிரத்து 406 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். புதிதாக கரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராட உதவுவதற்காக அமெரிக்கர்கள் பொது வெளிகளில் இருக்கும்போது முகக் கவசம் அணிய வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
மேலும் இது கட்டாயம் இல்லை என்ற போதிலும் உயிர் பாதுகாப்புக்கு அவசியம் என்று கூறினார். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் புதிய வழிகாட்டுதலின்படி, கரோனா வைரஸ் பரவல் அதிகமுள்ள இடங்களில் மக்கள் முகக் கவசம் பயன்படுத்த வேண்டும் என்றும், முகக் கவசம் கிடைக்காத பட்சத்தில் கட்டாயம் டீசர்ட், கைக்குட்டை உள்ளிட்ட மருத்துவம் சாராத பொருட்களை முகக் கவசங்களாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ட்ரம்புக்கு கோவிட்-19 பாதிப்பு இல்லை!