சமீப காலங்களாக, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. தடுப்பூசி தகவல்களை சீனா திருட முயற்சிப்பதாகவும், அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டி, அதனை அமெரிக்கா மூடியது. ஆனால், சில நாள்களிலேயே சீனாவும் தன் பங்குக்கு அமெரிக்க தூதரகத்தை மூடியது. இத்தகைய தொடர் சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் நோக்கில், சீனாவின் டிக்டாக் செயலிக்கு அதிபர் ட்ரம்ப் தடைவிதிக்க முடிவு செய்தார். இந்தத் தகவல் பரவத் தொடங்கியதையடுத்து, டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் களமிறங்க முடிவு செய்தனர். யாரும் எதிர்பாராத வகையில் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், வரும் செப்டம்பர் 15க்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.