இங்கிலாந்து நிறுவனங்களின் பிடியிலிருந்த ஈரானிய எண்ணெய் துறை, அந்நாட்டு மக்களின் பெரும் போராட்டத்துக்குப் பிறகு 1951ஆம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது. இதனை ஆதரித்துவந்த முகமது மொசாதே, 1952ஆம் ஆண்டு அந்நாட்டின் பிரதமரானார். இதனால் கடும் அதிருப்திக்கு ஆளான இங்கிலாந்து அரசு, அந்நாட்டுடனான உறவை அதிரடியாகத் துண்டித்துக்கொண்டது.
இதையடுத்து, ஈரானில் பிரதமர் முகமது மொசாதேவின் ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டம் தீட்டிய இங்கிலாந்து அரசு, அமெரிக்காவின் உதவியை நாடியது. ஏற்கனவே, ரஷ்யாவுடனான பனிப்போரால் அமெரிக்காவில் கம்யூனிசம் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஐசன்ஹூவர், ஈரான் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தை ஆமோதித்தார்.
அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ இத்திட்டத்துக்கு 'TPAJAX' என்று பெயர்சூட்டி, பிரிட்டன் உளவுத் துறையான எம்ஐ6 உதவியுடன் 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சிக் கவிழ்ப்பை வெற்றிகரமாக அரங்கேற்றியது. இது, ஈரான் மன்னர் முகமது ரீசா பஹ்லவி மீண்டும் அசுர பலத்துடன் அந்நாட்டில் அதிகாரத்துக்கு வருவதற்கும், இங்கிலாந்து எண்ணெய் நிறுவனங்கள் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் ஈரானில் செயல்படவும் வழிவகை செய்ததது.
இந்நிலையில், ஈரானுக்கான அமெரிக்க தூதர் லாய் ஹான்டர்சன் தன்னை அறியாமல், மன்னர் முகமதுவுக்கு அளித்த தவறான தகவலினாலேயே 1953 ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேறியதாக தற்போது கசிந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை ரகசிய ஆவணங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈரானில் பிரதமர் முகமது மொசாதேவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை உணர்ந்த மன்னர் முகமது ரீசா பீதியில், 1953ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். இதனிடையே, இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு நெருக்கமான ஒருவர் வெளிநாடு செல்வது அவருக்குக் கவலையளிப்பதாக லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம், தெஹ்ரான் அமெரிக்க தூதரகத்துக்குத் தவறான தகவலை ஒன்றை அனுப்பியுள்ளது.