அமெரிக்காவின் மினசோட்டா பகுதியில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட், காவலர் ஒருவரின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து, நிறவெறிக்கு எதிராக அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் ‘Black live's matter’ என்ற முழக்கங்களுடன் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், பிரேசில் நாட்டில் நிறவெறித் தாக்குதல்களாலும், காவல் துறையின் அத்துமீறிய தாக்குதல்களாலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின்போது காவல் துறையினர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை ஏந்தியும், அந்நாட்டின் அதிபர் பொல்சனாரோவிற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.
2019ஆம் ஆண்டைக்காட்டிலும், 2020ஆம் ஆண்டில் கறுப்பினர்கள் மீதான காவலர்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, காவல் துறையினரின் தாக்குதலில் உயிரிழந்த கறுப்பினர்களின் விகிதம் 43 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.
2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 606 கறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாாாகவும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் எட்டு விழுக்காடு அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.