மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டா தங்கள் 27 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக முன்னதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று (ஆக.08) இவர்களது விவாகரத்து இறுதியானது. இதன் மூலம் மெலிண்டா பிரெஞ்சும் பில் கேட்ஸும் சட்டப்படி பிரிந்துள்ளனர்.
முன்னதாக விவாகரத்துக்கான மனுவை வாஷிங்டன் நகரில் உள்ள கிங் கவுன்டி சுப்பீரியர் நீதிமன்றத்தில் மெலிண்டா தாக்கல் செய்ததை அடுத்து, இவர்களது விவாகரத்து இறுதி செய்யப்பட்டது.
எனினும் உலகின் பெரும் பணக்காரார்களான பில் கேட்ஸும் மெலிண்டா பிரெஞ்சும் தங்களது சொத்துக்களை எவ்வாறு பிரித்துக் கொள்கிறார்கள் என்பது குறித்த செய்தி இதுவரை வெளியிடப்படவில்லை. 1994ஆம் ஆண்டு ஹவாயில் திருமணம் செய்து கொண்ட பில் கேட்ஸும் மெலிண்டா பிரெஞ்சும் சியாட்டலை அடிப்படையாகக் கொண்ட உலகின் செல்வாக்கு மிக்க அறக்கட்டளைகளுள் ஒன்றான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர்.
2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, உலகளாவிய சுகாதாரம், மேம்பாடு, கல்வி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், இருவரும் தங்கள் அறக்கட்டளையின் இணைத் தலைவர்களாக தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:அனல் பறந்த மல்யுத்தக் களம்... மேலும் ஒரு அசத்தல் வெற்றி... அரையிறுதிக்குள் ரவி குமார் தாஹியா!