கடந்த சில நாட்களாக உலக மக்களை தன்னைப் பற்றியே பேசவைத்த பெருமை அமேசானில் பற்றி எரியும் நெருப்புக்கு மட்டுமே உரித்தானது. அந்தப் பிழம்பு உலகின் ஒட்டு மொத்த சர்வாதிகாரத்தனத்தையும் அங்கு பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக உலகின் நுரையீரலில் உள்ள திசுக்களையெல்லாம் அந்தப் பிழம்பு தின்று தீர்த்து விடும் போலும். அந்த சுடருக்கு தனது சுற்றுப்புறத்தைப் பற்றி 'அக்கறை' இல்லை. 'அது' இருந்திருந்தால் அமேசான் நதிக்கரை தனது இயல்பை இழந்திருக்காது. அங்கு பாடித்திரிந்த வண்டுகளின் ரீங்காரம் ஒப்பாரியானது. இனவிருத்திக்காக பறவைகள் இட்டிருந்த முட்டைகள் வெந்து வெடித்தன. அங்கு ஓடித்திரிந்த விலங்குகள் அந்த வேள்வியில் ஆகுதி ஆயின. காடு முழுவதும் பாய்ந்த நதி நெருப்பை அணைக்க முடியாமல் அந்த நெருப்பாலேயே விழுங்கப்பட்டிருக்கும். அக்னிக் குஞ்சொன்று அமேசானை அழிப்பதற்கு முன் அது எப்படியிருந்தது தெரியுமா? வாருங்கள் அந்த பசுமை போர்த்திய அமேசான் காடுகளின் பக்கமாகப் போய் சற்று இளைப்பாறி வருவோம்...
அமேசானின் இயற்கை அழகு
இயற்கை வரைந்த பேரெழில் ஓவியம் அமேசான். இந்தப் பிரபஞ்சப் புத்தகத்தில் எழுதி தீர்த்துவிட முடியாத இலக்கியம் அமேசான்! ஆண்டுதோறும் பெய்யும் அடைமழை... ஆதவனின் வெளிச்சம் அவ்வளவாய் காணாத தரை... ஆகாயம் கண்டு வியக்கும் அதிசயமான அமேசானில் வறட்சி என்ற வார்த்தைக்கே இடமில்லை... மேலும் கணக்கிடமுடியாத பிள்ளைகளுக்குப் பாலூட்டிய அட்சயப் பாத்திரம் அமேசான் தாய்! இப்படி ஆச்சர்யத்தோடு அமானுஷ்யமும் அங்கு நிரம்பி வழிகிறது. ஒரு பக்கம் அழகையும், மறுபக்கம் ஆபத்தையும் கொண்ட அமேசான் காடுகளுக்குள் சென்றுவிட்டு லேசில் மீண்டு வர முடியாது!
இதற்குக் காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான். இச்சிறப்பான அமேசான் காடுகளை உருவாக்கிய பெருமை அமேசான் நதியையே சாரும்!
அமேசான் தாயின் இதயம்
உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுகைகளைக் கொண்டதாக அமேசான் நதி விளங்குகிறது. தோராயமாக 6,992 கி.மீ. நீளமும் சராசரி ஆறுகளைவிட எட்டு மடங்கு அதிக கொள்ளளவையும் கொண்ட அமேசான் நதி, அமேசான் காடுகள் எனும் தாயின் இதயமாக இடைவிடாது துடித்துக் கொண்டிருக்கிறது. முதலில், மேற்கு நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்த இந்த ஆறு, ஆன்டிஸ் மலையின் வளர்ச்சியினால் தற்போது கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அமேசான் நதி, தான் பிறக்கும் இடத்திலிருந்து 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக்கொண்டு கடலில் கலக்கிறது. இந்தக் கிளை நதிகளில், 17 நதிகள் 1,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை. இதில் மழைக்காலத்தில் வினாடிக்கு 3,00,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973 முதல் 1990 வரையிலான காலக்கட்டத்தில் தோராயமாக வினாடிக்கு 2,09,000 கன மீட்டர் அளவு நீர் வரத்தும் இருந்தது. அமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும். ஒட்டுமொத்த ‘நியூயார்க்’ நகரமும் 12 வருடங்கள் உபயோகிக்கும் நீரை, ஒரே நாளில் அமேசான் நதி, அட்லாண்டிக் பெருங்கடலில் கொண்டு சேர்க்கிறது என்று புள்ளி விவரங்கள் புலம்பும் அளவுக்கு நீர்ப்பெருக்கு கொண்டது அமேசான் நதி.
அமேசான் தாயின் உடலும் உயிரும்
அமேசான் மழைக்காடுகள் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட எட்டு நாடுகளை எல்லைகளாகக் கொண்டு சுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டவை. பூமிப் பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவிகிதம் இங்குதான் உற்பத்தியாகிறது. பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்ஸைடை இக்காடுகள்தான் பெருமளவில் உட்கொள்கின்றன. இந்தக் காடுகளில் 3,000 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண்ணத்துப் பூச்சிகள், 200 விதமான கொசுக்கள், உலக உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில்தான் இருக்கின்றன.