அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதில் தற்போது அதிபராக உள்ள ட்ரம்ப்க்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் களமிறங்குகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையேயான முதல் விவாதம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாவது விவாதம் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், அதற்குள் செப்டம்பர் முதல் வாரத்தில் அதிபர் ட்ரம்ப்க்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் இருந்து திரும்பிவிட்டாலும் ட்ரம்ப் இதுவரை பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் ட்ரம்பிற்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் இரண்டாம் கட்ட விவாத நிகழ்ச்சி காணொலி மூலம் நடைபெறும் என்று தகவல் வெளியானது. ஆனால் பிடனுக்கு சாதகமாக இருக்கும் என்பதாலேயே விவாத நிகழ்ச்சி காணொலி மூலம் நடைபெறுவதாக ட்ரம்ப் விமர்சித்தார். மேலும் காணொலி மூலம் விவாதம் நடைபெற்றால் அதில் பங்கேற்க போவதில்லை என்றும் அறிவித்தார்.
மேலும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க ட்ரம்ப்பிற்கு மருத்துவக்குழு அனுமதியளித்தால், இரண்டாம் கட்ட விவாத நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க ட்ரம்ப் தயாராக உள்ளார் என்று அவரது பரப்புரை குழு அறிவித்திருந்தது.
இருப்பினும், தற்போதுள்ள சூழ்நிலையில் இரு தலைவர்களும் ஒரே மேடையில் இருப்பது பாதுகாப்பானதாக இருக்காது என்றும் இதனால் இரண்டாம் விவாத நிகழ்ச்சியை ரத்து செய்வதாகவும் விவாத நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மூன்றாம் கட்ட விவாத நிகழ்ச்சி வரும் அக்டோபர் 22ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.