உலக வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவையும் கோவிட்-19 தொற்று விட்டுவைக்கவில்லை. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திணறிவருகிறது. மறுபுறம் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஒரு சாரர் தொடர் கோரிக்கைகளை வைத்துவருகின்றனர்.
இந்நிலையில், முன்பு அறிவிக்கப்பட்டதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டதாக அந்நாடு அறிவித்துள்ளது. இது குறித்து கலிஃபோர்னியா மாகாணத்தின் அவசரகால செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிப்ரவரி 6, 17ஆம் தேதிகளில் தங்களது வீடுகளில் இறந்த இரண்டு நபர்களின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டன.
அதில் அவர்கள் இருவருக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை சுகாதாரத் துறை பணியாளர்கள் தீவிரமாகப் பரிசோதித்துவருகின்றனர். இதனால் ஏற்கனவே வெளியிட்டுள்ள இறந்தவர்களின் எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வாஷிங்டன் மாகாணம் கிர்க்லேண்டில் பிப்ரவரி 29ஆம் தேதிமுதல் உயிரிழப்பு ஏற்பட்டதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. ஆனால் தற்போதைய புதிய தகவலின்படி பிப்ரவரி 6ஆம் தேதியிலேயே அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.