சென்னை:சமுத்திரக்கனி தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமின்றி குணசித்திரம் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். மொழி கடந்து சென்று வில்லன் வேடமிட்டவர், தமிழில் கதை நாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது கே.ஆர் சினிமாஸ் தயாரிப்பில் ரா.பரமன் இயக்கத்தில் "பப்ளிக்" என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் சமுத்திரக்கனி உடன் இணைந்து காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அரசியல் கதைக்களம் கொண்டு விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் முன்பே வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. தற்போது இன்னொரு பிரச்சினையையும் இப்படம் எதிர்கொண்டு உள்ளது. படத்தில் யுகபாரதி எழுதியுள்ள 'உருட்டு உருட்டு' என்ற பாடல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பாடல் அனைத்து வித அரசியல் கட்சிகளையும் பாரபட்சம் இல்லாமல் விமர்சனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் உள்ள சில வரிகள் இன்றைய அரசியல் சூழ்நிலையை நேரிடையாக தாக்குவது போல் உள்ளது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் "சுகமா கால நக்கி பொழப்பாய்ங்க" என அதிமுகவை நேரடியாக தாக்குவது போல் வரிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
"மகனை சி.எம் ஆக்க துடிப்பாய்க" என திமுகவை தாக்குவது போலும், "மதத்தை முன்ன வச்சு மக்களையும் சிதைச்சு, நாட்டை பங்கு பிரிப்பாங்க" என பாஜகவையும் நேரிடையாக விமர்சிக்கும் வகையில் வரிகள் உள்ளதாக நெட்டிசன்கள் தரப்பில் கூறப்படுகிறது.