சென்னை: இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா. இவர் பாண்டியராஜன் இயக்கிய ‘டபுள்ஸ்’ என்ற திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சிவகாசி, ஜித்தன், ஈ, சரவணா, தோட்டா, ஆழ்வார் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்து உள்ளார். ஸ்ரீகாந்த் தேவாவுக்கு குத்துப் பாடல் என்றால் மிகவும் பிடிக்கும் என்ற காரணத்தால், குத்துப் பாடல்களில் இவர் ஸ்பெஷலிஸ்ட் ஆவார்.
தற்போது சுஜித் இயக்கத்தில் இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் 100ஆவது படமான “பிரியமுடன் ப்ரியா” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தேவா, பேரரசு, ஆர்வி உதயகுமார், லட்சுமி ராமகிருஷ்ணன், கங்கை அமரன், கே.ராஜன், அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியது:ஒரு படத்தை எடுத்து விடலாம். ஆனால் அதனை வெளியிடுவதில் மிகவும் கஷ்டமான சூழல் உள்ளது. மிகவும் வேதனையானது என்றார்.
இயக்குனர் பேரரசு கூறுகையில்: மனிதர்களை மதிக்கும் குணம் தேவாவிற்கு பிறகு ஸ்ரீகாந்த் தேவாவிடமும் உள்ளது. ஒரு கலைஞனுக்கு வெற்றியை தவிர நேர்முக சிந்தனை முக்கியம். சினிமாவில் தோல்வி அடைந்தால் உதவி செய்ய ஒருவரும் வரமாட்டார்கள். இத்தகைய சூழலில் 100 படம் பண்ணியுள்ளது சாதனை தான். தேவா, இளையராஜா காலம் எல்லாம் பொற்காலம். தற்போது திரைப்படங்களில் பாடல்கள் வைப்பதில்லை. இது மிகப் பெரிய ஆபத்து. அடுத்த தலைமுறையினர் கொண்டாட்டத்திற்கு பாடல்கள் இருக்காது எனத் தெரிவித்தார்.
கே.ராஜன் கூறியதாவது:ஸ்ரீகாந்த் தேவாவின் முதல் தயாரிப்பாளர் நான்தான். ‘டபுள்ஸ்’ படத்தில் பிரபுதேவா 25 லட்ச ரூபாய், மீனாவுக்கு 10 லட்ச ரூபாய் என சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் பாடல்கள் மட்டுமே 42 லட்ச ரூபாய்க்கு விற்றது. நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட நிதி திரட்ட எடுக்கப்பட்ட படம் பாதியில் நின்றது. ஆனால் இசை அமைப்பாளருக்கு செலவு செய்ததில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்க்கு ரூ.2.5 கோடி நட்டம் ஆனது என்றார்.