சென்னை:தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான தங்கர் பச்சான், தற்போது ‘கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, பாரதிராஜா, கௌதம் மேனன், அதிதி பாலன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய முன்தினம் (மே 7) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தங்கர் பச்சான், பேரரசு, எஸ்.ஏ.சந்திரசேகர், வைரமுத்து, ஜிவி.பிரகாஷ்குமார் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “சினிமாவை நேசித்ததால் அது என்னை இழுத்துக் கொண்டே உள்ளது. சினிமாவில் பணம் சம்பாதித்தேன். ஆனால், தங்கர் பச்சான் போல் பெயரை சம்பாதித்தது இல்லை. இயற்கை விவசாயம் செய்யும் தங்கர் பச்சான், சினிமாவில் கலப்படமற்ற இயற்கையான படங்களை எடுத்து வருகிறார்.
இடையில் சறுக்கினாலும், மீண்டும் மீண்டும் இதுபோன்ற படங்களை இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் நான் நடித்துள்ளதே பெருமை. அதுவும் இந்த வயதில். நான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர ஆசைப்பட்டேன். அவர் முடியாது என்று கூறிவிட்டார். கோபத்தில் நான் இயக்குனர் ஆகிக்காட்டுகிறேன் என்று இயக்குநர் ஆகிவிட்டேன்.
என் மகன் விஜய்யை அறிமுகப்படுத்த முதலில் ஆல்பம் தயாரித்துக் கொண்டு நான் சென்ற இடம், பாரதிராஜா அலுவலகம்தான். ஆனால், அவர் நீயே (எஸ்ஏசி) இயக்கு என்று, ர்மறுப்பு தெரிவிப்பதை மறைமுகமாக சொன்னார். ஆனால், இப்போது தங்கர் பச்சான் எங்களை நண்பர்களாக நடிக்க வைத்துள்ளார். இது ஒரு கொடுப்பினைதான். இருவரும் சேர்ந்து தொழில் செய்ய முடியவில்லை.
இந்தப் படத்தில் அது நடந்துள்ளது. கௌதம் மேனனிடமும் விஜய்க்காக வாய்ப்பு கேட்டேன். அதுவும் நடக்கவில்லை. என் பையனை நானே இயக்கினேன். அதுவும் நல்லதுதான். அதனால்தான் விஜய் கமர்ஷியல் நடிகராக மாறினார்” என கூறினார். இதனையடுத்து பேசிய இயக்குநர் சுசீந்திரன், “எனது வெண்ணிலா கபடி குழு படம் வெளியான பிறகு என்னை தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசியவர், தங்கர் பச்சான். நல்ல கதைக்கு தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும்.
இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறும். எனது ‘ராஜபாட்டை’ படத்தில் முதல் காட்சியே விக்ரம் உடன் யோகிபாபுவுக்கு சீன் வைத்தேன். அதன் பிறகு எனது தயாரிப்பில் ‘வில் அம்பு’ படத்தில் முழு நீள காமெடி கதாபாத்திரமாக நடித்தார். யோகிபாபு கடின உழைப்பாளி. பாரதிராஜா நமது பொக்கிஷம். ஐந்து படமாவது இயக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “தங்கர் பச்சானை சில மாதங்களுக்கு முன்புதான் சந்தித்தேன். அவரே, என்னை எனது அலுவலகத்தில் சந்தித்து படங்கள் பற்றி நீண்ட நேரம் பேசினார். படப்பிடிப்புக்கு இடையில்தான் இங்கு வந்துள்ளேன். அவருடைய ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ எனக்கு பிடிக்கும்.
‘அழகி’யும் பிடிக்கும்” என கூறினார். அப்போது வந்து பேசிய இயக்குநர் தங்கர் பச்சான், ‘லோகேஷ் தற்போது இந்திய சினிமாவின் பெருமையாக உள்ளார்’ என்றார். மேலும், இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் குமார் பேசுகையில், “எனக்கு அழகி படம் ரொம்ப பிடிக்கும். அதில் வரும் ‘ஒளியிலே’ பாடல் மிக அழகாக எடுத்து இருப்பார்.
‘சொல்ல மறந்த கதை’ படம் யாருடையது என தேடி, அதன் பிறகு அந்த படத்தை பார்த்தேன். எனக்கு தங்கர் பச்சானின் படங்கள் பிடிக்கும் என்பதால், அவரோடு பணிபுரிய ஆர்வம் இருந்தது. சத்தியமங்கலத்தில் ‘கள்வன்’ படப்பிடிப்பில் நானும், பாரதிராஜாவும் இருந்த போது, இப்படம் பற்றி என்னிடம் கூறினார்.
வைரமுத்துவின் வரிகள் பலமாக இருந்தது. ஒரு உணர்வுபூர்வமான ஆல்பம் செய்ய வேண்டும் என எனக்கு ஒரு ஆசை இருந்தது. கமர்ஷியல் படங்கள் பண்ணினாலும், கலை ரீதியான படங்கள் பண்ண விரும்பினேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை கற்றுக் கொள்கிறோம். கதைதான் இசையை தீர்மானிக்கும். இந்த படம் ஒரு அழகான கதை.
படத்தின் லைன் கேட்டதும் பிடித்திருந்தது. இந்த படத்துக்காக விலை வைக்க முடியாது. அதனால் இந்த படத்துக்கு விலை பேசவில்லை. ‘சூரரைப்போற்று’ படத்தில் ‘கையிலே ஆகாசம்’ பாடல் கிடையாது. பிறகு சுதாவிடம் நான் கூறினேன், கிளைமாக்ஸில் வைக்கலாம் என்று. சுதா முதலில் முடியாது என்று கூறினார். பின் என் மீது வைத்த நம்பிக்கையில் அந்த பாடல் வைக்கப்பட்டது.
எனக்கு உணர்வுப்பூர்வமான படங்கள் பிடிக்கும். அதனால்தான் அந்த மாதிரி படங்களிலும் பணியாற்றுகிறேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். என்னை ஹீரோவாக இயக்குநர் பாலா என்னை உருவாக்கினார். நான் எம்.எஸ்.வி, ராஜா, ரகுமான் ஆகியோரின் பாடல்கள் கேட்பேன். நான் பிஜிஎம் கற்றுக் கொண்டதே இளையராஜாவின் இசையை பார்த்துதான்” என தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, “ஜிவி.பிரகாஷ்குமார் இசைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டால் தொடக்கூடிய உச்சம் ஏராளம். ஒரு நகைச்சுவை கலைஞன் தன் அடையாளத்தை தலையில் வைத்துள்ளான். யோகிபாபுக்காக எழுதிய பாட்டு, இது. யோகிபாபு தனது அடையாளத்தை தனது தலையில் வைத்துள்ளார்.
பாரதிராஜா தவிர்க்க முடியாத காரணங்களால் இங்கு வந்து உங்களை சந்திக்க முடியாத வாய்ப்பை இழந்துள்ளார். அவரது சிந்தனை எல்லாம் இங்குதான் இருக்கும். திரையரங்களில் சென்று படம் பார்க்கும் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. தயவுசெய்து திரையரங்குகளில் சென்று படம் பாருங்கள். பாரதிராஜாவுக்கு பூங்காத்து திரும்புமா என்ற பாடலை பரிசளிக்கிறேன்.
தமிழ் வாழையடி வாழையாக வளர்வது. என் காலத்துக்குள் ஒரு தமிழ் கவிஞன் தோன்றுவான். இளையராஜாவிடம் இசை இன்னும் தீர்ந்து போகவில்லை. இவரை மீண்டும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் உடன் 85 சதவீதம் பணியாற்றி உள்ளேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய நடிகை அதிதி பாலன், “இப்படத்தில் லெஜன்ட்ரி இயக்குநர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தங்கர் பச்சான் அவரது படங்களில் மனித உணர்வுகளை நன்றாக கடத்துவார். நடிக்கும்போது பலமுறை என்னை பாராட்டினார். திட்டவே இல்லை. பொறுமையாக சொல்லிக் கொடுத்தார்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் யோகிபாபு, “இயக்குநருக்கு நன்றி. நானும் ஜிவி.பிரகாஷ்குமாரும் அண்ணன் - தம்பி போன்றவர்கள். தங்கர் பச்சான் கதை சொல்லும் போதும், படம் முடிந்தும் பலாப்பழம் கொடுத்தார். ஆனால், அது இரண்டு நாட்கள் கழித்துதான் பழுக்கும். ‘16 வயதினிலே’ படத்தை ரீமேக் செய்தால் பரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை” என்றார்.
இதனையடுத்து பேசிய இயக்குநர் தங்கர் பச்சான், “இது நான் 2003இல் எழுதிய கதை. இப்போது யாரிடமும் அன்பு இல்லை. செல்போன் உடன்தான் அனைவரும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். மக்களின் வாழ்வியலை உலகம் முழுவதும் சொல்வதுதான் முக்கியம். அதுதான் பான் இந்தியா படம். நல்ல படைப்புகளை தயாரிக்க யாரும் முன் வருவதில்லை.
ஒன்பது ரூபாய் நோட்டு மக்கள் கொண்டாட வேண்டிய படம். நல்ல படங்களை வீட்டில் இருந்து பார்க்கின்றனர். ஆனால் நன்றாக இல்லை என்று சொல்லும் படத்தை எப்படி நன்றாக இல்லை என்று பார்ப்பதற்காக தியேட்டர்களுக்கு செல்கின்றனர். அழகி படத்தை 100 முறை திரையிட்டேன். ஆனால் வாங்க ஆள் இல்லை. அப்படிப்பட்ட ஊர்தான் இது. ஒரு நல்ல படைப்புக்காக இப்படத்தில் பலரையும் துன்புறுத்தி உள்ளேன்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:விஜய் கால்ஷீட்டுக்காக கதையுடன் காத்திருக்கும் வெங்கட் பிரபு.. கஸ்டடி டிரைலர் வெளியீட்டு விழாவில் தகவல்!