கரோனா பாதிப்பு காரணமாக லாக்டவுன் போடப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன, பொதுமக்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர். இந்த நிலையில் தான் ஓடிடி தளங்கள் மெல்ல மெல்ல நமது வீடுகளுக்குள் வர தொடங்கின. இதனால் வீட்டில் முடங்கியிருந்த பொதுமக்கள் தங்களது மொபைல் போனிலேயே, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த படங்கள் மற்றும் இணையத் தொடர்களைப் பார்த்து ரசித்தனர்.
மெல்ல வளர்ச்சி அடைந்த ஓடிடி தளங்கள் போகப் போக ரசிகர்களைத் தன்வசப்படுத்தின. இதனால் பல்வேறு மொழிகளில் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் தொடர்கள் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தொடங்கின.
கரோனா காலத்தில் வளர்ச்சி: அதன் காரணமாக இந்தாண்டு எப்போதும் இல்லாத வகையில் தமிழில் ஏராளமான ஓடிடி தொடர்கள் எடுக்கப்பட்டு வெளியாகின. குறிப்பாகத் திரையரங்குகளில் வெளியாகும் படங்களைப் போலவே, ஏகப்பட்ட பொருட்செலவில் வெப் சீரீஸ்கள் எடுக்கப்பட்டன. அதுமட்டுமின்றி முன்னணி நடிகர் நடிகைகள் கூட ஓடிடி பக்கம் தாவினர்.
ஜீ5 யில் வெளியான விலங்கு இணைய தொடர் ஏனென்றால் இங்கு தயாரிக்கப்படும் ஓடிடி தொடர்கள் பல்வேறு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. இதனால் ஒரு நடிகருக்கும் மாநிலம் கடந்த அறிமுகம் கிடைக்கிறது. இது அவர்களது சினிமா வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக அமைகிறது. கீர்த்தி சுரேஷ் தொடங்கி, தற்போது எஸ்ஜே.சூர்யா வரை ஓடிடி தொடர்களில் தங்களை இணைத்துக்கொண்டு உள்ளனர். அவை வெற்றியும் பெறுவதால் அடுத்தடுத்த அசுர பாய்ச்சலுக்கு தயாராகி வருகின்றனர்.
தமிழ் இணையத் தொடர்கள்: இது ஒருபுறம் இருக்க இந்த ஆண்டு ஓடிடி தளங்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை அசூர வளர்ச்சி கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில், 50 சதவீதம் அதிகரித்து உள்ளதாக புள்ளிவிவரம் சொல்கிறது. அதுவும் புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியான ’சுழல்’ மற்றும் பிரசாந்த் இயக்கத்தில் ஜீ5 தளத்தில் வெளியான ’விலங்கு’ ஆகிய தொடர்கள் இந்த ஆண்டில் பிளாக்பஸ்டர் வெற்றியை ஓடிடி தளங்களுக்குக் கொடுத்துள்ளன.
அமசான் பிரமில் வெளியான சுழல் இணைய தொடர் இதனால் மற்ற ஓடிடி தளங்களும் தமிழில் முழு கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. அமேசான் பிரைமில் சமீபத்தில் வெளியான ’வதந்தி’ தொடரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் முறையாக எஸ்.ஜே.சூர்யா ஓடிடி இணைய தொடரில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ’அனந்தம்’, ’பேப்பர் ராக்கெட்’, ’பேட்டைக்காளி’ போன்ற இணைய தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் அடுத்த ஆண்டு அனைத்து ஓடிடி தளங்களும் தமிழில் அதிக இணைய தொடர்களை தயாரிக்க ஆயத்தமாகியுள்ளன. இதுகுறித்து ஜீ5 ஓடிடி தளத்தின் கிரியேட்டிவ் ஹெட் கௌசிக் கூறும்போது, “மற்ற மாநிலங்களை விட தமிழில் இணைய தொடர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதற்கு இந்த ஆண்டு ஏராளமான வெப் சீரிஸ் மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்துள்ளதே சாட்சி.
மேலும் அதிக இணையத் தொடர்கள்: மற்ற மாநிலங்களிலும் வெப் சீரிஸ் பார்க்கிறார்கள், அங்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்த ஆண்டு இன்னும் அதிக வெப் சீரிஸ் எடுக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான வேலை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தொடர்களின் பணிகளும் சென்று கொண்டு இருக்கிறது. அதே சமயம் புதிய தொடர்களுக்கான வேலையும் நடந்து வருகிறது. ’விலங்கு’ மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது மகிழ்ச்சி” என்றார்.
அமேசான் பிரைமில் வெளியான வதந்தி இணைய தொடர் தொடர்கள் மட்டுமின்றி, இந்த ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ’மகான்’, சூர்யா தயாரிப்பில் உருவான ’ஓ மை டாக்’, கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடித்த ’சாணிக் காயிதம்’ போன்ற படங்களை, அமேசான் பிரைம் நேரடியாக ஓடிடியில் வெளியிட்டுள்ளது.
அது மட்டுமின்றி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி, இந்த ஆண்டு உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் டாப் 10 பட்டியிலில் இடம் பெற்றுள்ளது. இதேபோல் ஜீ5 வெளியிட்ட ’விக்ரம்’, ’வீட்ல விசேஷம்’, ’ஆர்ஆர்ஆர்’, ’யானை’ ஆகிய படங்கள் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் பெற்று சாதித்துள்ளது. இதனால் வரும் ஆண்டுகளில் திரைப்படங்களுக்கு இணையாக ஓடிடி தளங்கள் இணைய தொடர்களை தயாரிக்கும் முனைப்பில் உள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க:ETV Bharat 2022 Roundup: இந்த வருடத்தின் பான் இந்தியன் ஸ்டார் துல்கர் சல்மான்!