தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 19, 2022, 8:21 PM IST

ETV Bharat / entertainment

'தமிழில் அதிகரிக்கும் டப்பிங் படங்கள்..!' : ஒரு பார்வை

சமீப காலமாக தமிழ்நாட்டில் டப்பிங் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைப்பற்றிய ஒரு சிறு பார்வை.... இதோ...

'தமிழில் அதிகரிக்கும் டப்பிங் படங்கள்..!' : ஒரு பார்வை
'தமிழில் அதிகரிக்கும் டப்பிங் படங்கள்..!' : ஒரு பார்வை

தமிழ் சினிமா தோன்றிய காலத்தில் இருந்து பிறமொழிப் படங்களை இங்கு டப்பிங் செய்தும் ரீமேக் செய்தும் வெளியிடும் பழக்கக்கள் இருந்துள்ளன. அப்படி ரீமேக் செய்யப்படும் படங்கள் இங்கு வெற்றிகரமாக ஓடிய வரலாறும் உண்டு. ஆனால், டப்பிங் செய்யப்படும் படங்கள் அதிக அளவில் வெற்றிபெற்றதில்லை என்பதே நிதர்சனம்.

புஷ்பா

சில விதிவிலக்குகளும் உண்டு. இன்றைய டிஜிட்டல் உலகில் இந்த டப்பிங் படங்களின் வரவு அதிகரித்துள்ளது. ஒருகாலத்தில் ஆங்கிலப்படங்களை புரியாமல் பார்த்து வந்த நமக்கு இன்று அத்தனை ஹாலிவுட் ஹீரோக்களும் சரளமாக சென்னை தமிழில் பேசுகின்றனர், இந்த டப்பிங் புண்ணியத்தில். முன்பெல்லாம் ஆங்கில படங்களை காட்டிலும் தெலுங்கு படங்கள்தான் அதிகமாக டப்பிங் செய்யப்பட்டு இங்கு வெளியிடப்படும்.

ஆர்ஆர்ஆர்

அதிலும் அங்குள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள் இங்கு வெளியாகி தமிழ் படங்களுக்கே டஃப் கொடுத்தன என்பது தனிக்கதை. அதிலும் 90-களுக்கு முன்புவரை ஆதிக்கம் செலுத்தின, டப்பிங் படங்கள். அதன்பிறகு அப்படியே மெல்ல மெல்ல டப்பிங் படங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.

'கேஜிஎஃப்’

அப்படியே டப் செய்யப்பட்டு வந்தாலும் இங்கே வசூலில் படுமோசமான தோல்வியைச் சந்தித்தன. ஆனால், தற்போது மீண்டும் டப்பிங் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. அதிலும் தெலுங்கு தவிர்த்து கன்னடம், மலையாளம், இந்தி என இந்திய மொழிப்படங்கள் அதிக அளவில் தமிழில் டப்பிங் செய்யப்படுகின்றன. ஆங்கில படங்களுக்கு இணையாக வசூலும் குவித்துவருவதுதான் இப்போது பேசுபொருளாக உள்ளது.

கேஜிஎஃப்

இவை அனைத்திற்கும் காரணம் டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் ஓடிடி தளங்களின் வளர்ச்சியும்தான். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏராளமான டப்பிங் படங்கள் இங்கு வெளியாகி கல்லா கட்டியுள்ளன. தமிழில் முதல் டப்பிங் படம் என்றால் 1943ஆம் ஆண்டு வெளியான கன்னடப்படமான ’ஹரிச்சந்திரா’ என்கிறார்கள்.

பாகுபலி

அதன்பிறகு அவ்வப்போது டப்பிங் படங்கள் தமிழில் வெளியாகின. அதன்பிறகு தெலுங்கில் சிரஞ்சீவிக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த ’கைதி’ என்ற படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு 100 நாட்களைக் கடந்து ஓடியது. அதேபோல் கே.விஸ்வநாதன் தெலுங்கில் 1983ஆம் ஆண்டு இயக்கிய ’சாகர சங்கமம்’ என்ற படம் அதே ஆண்டு தமிழில் ’சலங்கை ஒலி’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டது.

கமலின் அற்புதமான நடிப்பு, இளையராஜாவின் இசை ஆகியவற்றால் தமிழிலும் வெற்றிபெற்றது. இதன் பாடல்கள் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இளையராஜா மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவருக்கும் தேசிய விருதும் பெற்றுத்தந்தது, இப்படம். இதனைத் தொடர்ந்து ’பூ ஒன்று புயலானது’, ’இதயத்தை திருடாதே’, ’இதுதான்டா போலீஸ்’, ’அம்மன்’ போன்ற படங்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் வெளியாகி வெற்றிபெற்றன.

2000-க்குப் பிறகு டப்பிங் படங்களின் எண்ணிக்கை அப்படியே குறைய ஆரம்பித்தன. அப்படியே வெளியானாலும் வசூலில் தோல்வியடைந்தன. இந்த சமயங்களில் தமிழ் சினிமா உச்சத்தில் இருந்தது. எனவே, டப்பிங் படங்களை தமிழ்நாட்டு ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. நல்ல கதையம்சம் கொண்ட படங்களும் வரவில்லை.

தெலுங்கு மசாலா படங்கள் அப்போது நிறைய டப் செய்யப்பட்டு வெளியானதும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த காலகட்டத்தில் தெலுங்கு டப்பிங் படங்களின் மார்க்கெட்டை, ஆங்கில டப்பிங் படங்கள் பிடித்துவிட்டன. ஆங்கிலத்தில் இருந்து டப் செய்யப்பட்ட சூப்பர் ஹீரோ படங்கள் இங்கு வசூல் வேட்டை நடத்தத் தொடங்கின.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு அனுஷ்கா நடிப்பில் ’அருந்ததி’ என்கிற படமும், ராம் சரணின் ’மஹதீரா’வும் இங்கு டப்பிங் செய்யப்பட்டு வசூலில் சாதனைப் படைத்தது. அதன்பிறகு தொடங்கிய டிஜிட்டல் யுகத்தில் மற்ற மாநில மொழிப்படங்களும் இங்கு டப்பிங் செய்யப்பட்டு வெளியாகத் தொடங்கின. அதற்கு பாலம் அமைத்துக்கொடுத்த படம் என்றால் ராஜமௌலியின் பாகுபலியை சொல்லலாம். உலகமெங்கும் இப்படம் வசூல் சாம்ராஜ்யம் நடத்தியது.

பிரமாண்ட படங்கள் ஹாலிவுட்டில் மட்டுமே வந்துகொண்டு இருந்ததை உடைத்து இந்தியாவிலும் பிரமாண்ட படங்கள் எடுக்க முடியும் என்பதை பாகுபலி நிகழ்த்திக்காட்டியது. சமீப காலமாக ஓடிடி தளங்களின் வளர்ச்சியால் மற்ற மொழிகளில் எந்தப் படம் வெளியானாலும் டப்பிங் செய்யப்பட்டு ஓடிடியில் வெளியிடப்பட்டன. இந்த கரோனா பாதிப்பிற்குப் பிறகு துவண்டு, கிடந்த திரையரங்குகளுக்கு உயிர்கொடுத்தது என்றால் அது டப்பிங் படங்கள்தான்.

குறிப்பாக தமிழ்நாட்டில் கரோனா தாக்கத்திற்குப் பிறகு, வெளியான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வசூலில் மண்ணைக்கவ்வின. ’அண்ணாத்த’, ’வலிமை’, ’பீஸ்ட்’, ’எதற்கும் துணிந்தவன்’ என அனைத்துப்படங்களும் ரசிகர்களை வைத்து செய்தது. ஆனால் டப்பிங் படங்களான ’ஆர்ஆர்ஆர்’, ’புஷ்பா’ சமீபத்தில் ’கேஜிஎஃப்’ ஆகிய படங்கள் இங்கு வசூலில் சக்கைப்போடு போட்டன.

கேஜிஎஃப் படம் எல்லாம் இன்றுவரை அரங்கு நிறைந்த காட்சிகளாக தமிழ்நாட்டில் ஓடி வருகிறது. இதனால் திரையரங்கு உரிமையாளர்களும் இதுபோன்ற படங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். தமிழ்ப் படங்களை விடவும்; இந்த டப்பிங் படங்கள் மக்களை திரையரங்குகளை நோக்கி படையெடுக்க வைக்கின்றன.

மக்களும் ரசிக்கிறார்கள். முன்பெல்லாம் 100க்கு 30 இருந்த டப்பிங் படங்களின் வெளியீட்டு விழுக்காடு, தற்போது 100க்கு 70% ஆகிவிட்டது எனக் கூறுகின்றனர். தமிழில் நல்ல கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் சமீப காலங்களில் குறைந்துகொண்டே வருவதால் இதுபோன்ற டப்பிங் படங்களின் ஆதிக்கம் தொடரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இதையும் படிங்க: அற்புதம்மாள் வாழ்க்கையை படமெடுக்கிறாரா வெற்றிமாறன்..?

ABOUT THE AUTHOR

...view details