கோயம்புத்தூர்:கிரீன் கிளீன் அமைப்பு சார்பில் கோவையில் இன்று (மே 7) செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், “இசைஞானி இளையராஜாவின் 80ஆவது பிறந்த நாள் வருகிற ஜூன் 2 அன்று கொண்டாடப்படுகிறது.
அந்த நாளை மிகப்பெரிய அளவில் கொண்டாடும் வகையில் எங்களின் அமைப்பு சார்பில் நேரடி இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படஉள்ளது. எங்களது அமைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.
தற்போது சுற்றுச் சூழலை மையப்படுத்தியே இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பழங்குடியின மக்களின் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் இளையராஜா பங்கேற்பார். தென்னிந்திய இசை உலகில் முன்னணி பாடகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் நபர்கள் இசை நிகழ்ச்சியைக் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. அனைத்து தரப்பு மக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் குறைந்த அளவிலான அனுமதி கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. இலவச அனுமதி சீட்டும் வழங்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நாட்டுப் பற்று பேசினால் சங்கியா..? - பேரரசு கேள்வி