சென்னை: நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து, கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நாயகனாக நடித்த படங்கள் சொதப்பிய நிலையில், கடந்தாண்டு வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்து உள்ளார்.
இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ஏற்கனவே சந்தானம் நடித்து வெளிவந்த படம் டிக்கிலோனா படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இரண்டாவது முறையாக கார்த்திக் யோகி மற்றும் சந்தானம் இணைந்து உள்ளனர். இந்த படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது.
இப்படத்தில் மேகா ஆகாஷ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இப்படத்திற்கு இசை அமைத்து உள்ளார். இந்த நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி படம் வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
வடக்குப்பட்டி ராமசாமி படம் ஒரு பீரியட் காமெடி - டிராமா படமாக உருவாகி உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில், டிரெய்லரில் பெரியார் குறித்து வந்த வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் சாமி இல்லன்னு சொல்லிட்டு சுத்துன ராமசாமி தான நீ என்ற வசனம் வரவேற்பு பெற்றது. இதனை அடுத்தும் பொங்கல் பண்டிகைக்கு நடிகர் சந்தானம் தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார்.
அதில் இப்படத்தில் வரும் வசனத்தின் ஆடியோவிற்கு நான் அந்த ராமசாமி இல்ல என்று சந்தானம் சொல்வது போல் பேசியிருந்தார். வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பெரியாரை இழிவுபடுத்தி சந்தானம் வீடியோ வெளியிட்டுள்ளதாக சர்ச்சை வெடித்தது. உடனே அந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கி விட்டார்.
இந்த நிலையில் நெட்டிசன்கள், முன்னதாக ஜக்கி வாசுதேவ், சந்தானம் உள்ளிட்டோரை தீய சக்திகள் என்று அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் பேசியிருந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். மேலும், இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவதால், சமூக நீதி பேசும் கட்சியில் இருந்து கொண்டு பெரியாரை விமர்சிக்கும் சந்தானத்தின் படத்தை வெளியிடுகிறார்கள் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:"தமிழ் சினிமாவிலும் நெப்போட்டிசம் உள்ளது" - பட்டுனு போட்டு உடைத்த ஆர்ஜே பாலாஜி! அவர் கூறியது யாரை தெரியுமா?