சென்னை: 2003ஆம் ஆண்டில் இருந்து சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படும். சர்வதேச திரைப்பட விழாவிற்காக 57 நாடுகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட படங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அதில், இருந்து தேர்வுக் குழு மூலம் சிறந்த 126 படங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு திரைப்பட விழாவில் 8 ஈரானிய மொழிப் படங்கள், 5 கொரிய மொழிப் படங்கள், பிரெஞ்சு, ஹங்கேரி, மெக்சிகோ நாடுகளில் இருந்து தலா 3 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மேலும் விடுதலை, மாமன்னன், அயோத்தி உள்ளிட்ட சிறந்த 12 தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது.
மேலும் உலக சினிமா பிரிவில், பாலகம் (தெலுங்கு), மனஸ் (மலையாளம்) ஆகிய இரண்டு இந்திய படங்களோடு 12 படங்களும், இந்திய பனோரமாவில் 19 படங்களும் திரையிடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு தேர்வாகும் சிறந்த படங்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் 9 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் சிறந்த தமிழ் திரைப்படமாக அயோத்தி தேர்வு செய்யப்பட்டு இயக்குநர் ஆர்.மந்திர மூர்த்தி மற்றும் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் ஆகியோருக்கு தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த தமிழ் திரைப்படமாக உடன்பால் தேர்வு செய்யப்பட்டது இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் மற்றும் தயாரிப்பாளர் கே வெள்ளைதுரைக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
தமிழ் பிரிவில் தனி நபர் சிறப்பு ஜூரி விருது, விடுதலை படத்தின் இயக்குநர் வெற்றிமாறனுக்கு 50 ஆயிரம் ரூபாயிக்கான காசோலையும் கோப்பையும் வழங்கப்பட்டது. மாமன்னன் படத்திற்காக சிறந்த நடிகர் விருது வடிவேலுவுக்கும், சிறந்த நடிகையாக அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானிக்கும் வழங்கப்பட்டது.
அதே போல சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது போர்தொழில் படத்திற்காக கலைச்செல்வன் சிவாஜி மற்றும் ஸ்ரீஜித் சாரங் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த படத்தொகுப்பு போர் தோழில் படத்திற்காக ஸ்ரீஜித் சாரங் அவர்களுக்கும், சிறந்த ஒலிப்பதிவாளர் (sound engineer) விருது மாமன்னன் படத்திற்காக சுரேன் ஜி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.